சீரடி சாய்பாபா அவர்களிடம் எத்தனையோ பக்தர்கள் நெருக்கமாக இருந்தார்கள். ஆனால் பாபாவிடம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்த ஒரே பக்தர் மகல்சாபதி. சாய்பாபா – மகல்சாபதி இந்த இருவரது வாழ்க்கையும் இரண்டற கலந்து இருந்தது.


இன்று உலகத்தில் இருக்கும் கோடிக்கணக்கான பக்தர்கள் சீரடி சாய்பாபாவின் அதிசயத்தை உணர்ந்து அவரை பூஜித்து வழிபடு செய்கிறார்கள் என்றால் அதற்கு மூலகாரணமாக இருந்தது மகல்சாபதி. சீரடிக்கு வந்த இளம் பாபா பெயரை “சாய்பாபா” என்று மாற்றிய பெருமைக்கூறிய மாமனிதர் இந்த மகல்சாபதி.

சாய்பாபா என்ற மந்திர சொல்லில் பக்தர்கள் மயங்கிக் கிடப்பதற்கான காரணமும் இவரேதான்.

சீரடியில் சாய்பாபாவை நாற்பது  வருடங்கள்  பூஜித்து, ஆராதித்து, வழிபட்ட சிறப்பும் இவருக்கு உண்டு. சாய்பாபாவுக்கு அவர் வெறும் பக்தனாக மட்டும் அல்லாமல், வேலைக்காரனாகவும் இருந்தார். இவர் ஒன்றும் பணக்காரர் கிடையாது. மகல்சாபதி பரம ஏழை. ஆனால் நல்ல மனிதர். மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்ய விரும்பாதவர்.

சீரடியில் உள்ள கண்டோபா கோவில், அவரது குல தெய்வமாகும். இந்த கோவிலில் குடிகொண்டிருக்கும் மூலவர் சிவனின் பெயர் மகல்சாபதி. அந்த பெயரையே அவருக்கு வைத்திருந்தார்கள். அந்த ஆலயத்தின் பூசாரியாகவும் அவரே  இருந்தார். பொற்கொல்லர் இனத்தைச் சேர்ந்த மகல்சாபதிக்கு குடும்பத் தொழில் அவருக்கு ஏற்றதாக இல்லை. விவசாய நிலம் ஏழு ஏக்கர் இருந்தும்  விளைச்சல் இல்லாததால் அதிலிருந்து அவருக்கு வருமானம் எதுவும் கிடைக்கவில்லை.


வறுமையில் வாடிய அவர் கண்டோபா ஆலய வருவாயை மட்டுமே  சார்ந்து இருந்தார். அந்த வருமானமும் கோவில் நிர்வாக செலவுகளுக்கு சென்றது. மகல்சாபதியின் வாழ்க்கை வறுமையில் சிக்கியது. மனைவி, 3 மகள்கள், 1 மகனை காப்பாற்ற அவர் கடும் போராட்டங்களை எதிர்கொண்டார். இந்த சூழ்நிலையில் தான் அவர் 1854-ம் ஆண்டு முதன் முதலில் இளம் பாபாவை சந்தித்தார்.

ஒரு வேப்ப மரத்தடியில் அமர்ந்திருந்த  இளம் பாபாவின் செயல்பாடுகள் மகல்சாபதியை ஈர்த்தன. ஆனால் அவர் திடீரென மாயமாகிவிட்டார். 1858-ம் ஆண்டு பாபா மீண்டும் சீரடிக்கு திரும்பிய போது முதன் முதலில் மகல்சாபதிதான் அவரைப் பார்த்தார். மகிழ்ச்சி பொங்க அவர், “ஆவோ சாய்” என்று அழைத்தார்.

அன்று அவர் அப்படி கூப்பிட்ட பெயரே பாபாவுடன் இணைந்து ‘சாய்பாபா’ என மாறி இன்றுவரை நிலைத்து கொண்டிருக்கிறது.