பெங்களூரு:
224 தொகுதிகளை கொண்டுள்ள கர்நாடகா சட்டமன்றத்திற்கான தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணி யுடன் முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து வரும் சனிக்கிழமை (12ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ள கர்நாடக சட்டமன்ற தேர்தல், வர உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோடியாக கருதப்படுகிறது. இதன் காரணமாக காங்கிரசும், பாரதியஜனதாவும் ஆட்சியை கைப்பற்ற கடுமையாக போட்டியிட்டு வருகிறது.
இதற்கிடையில், மற்றொருபுறம் தேவகவுடா தலைமையிலான மதச்சார் பற்ற ஜனதா தளம் மாநிலம் முழுவதும் பம்பரமாக சுற்றி வருகிறது. தேர்தலை முன்னிட்டு, கடந்த 2 மாதங்களாக கர்நாடகாவில் தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது.
இதன் காரணமாக ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற ஆவல் நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது.
காங்கிரசுக்கு ஆதரவாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முதல்-அமைச்சர் சித்தராமையா உள்பட காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கர்நாடகாவில் முகாமிட்டு 224 தொகுதிகளையும் சுற்றி வந்து பிரசாரம் செய்து வருகின்றனர்.
அதே வேளையில், காங்கிரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படுத்தும் வகையில், பாரதியஜனதா கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜ தேசிய தலைவர் அமித்ஷா கர்நாடகாவில் வீடு எடுத்து தங்கி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பிரதமர் மோடி ஏற்கனவே பல கட்ட பிரசாரம் செய்த நிலையில், தற்போது கடந்த 8 நாட்களாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
பரபரப்பாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் முடிவுக்கு வருகிறது. அதைத் தொடர்ந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் வரும் 12-ந்தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. அதன் பிறகு ஓட்டுப் பெட்டிகள் அனைத்தும் ஓட்டு எண்ணும் இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். 15-ந்தேதி ஓட்டுகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும்.
மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் ஒரு தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் மரணம் அடைந்து விட்டதால் 223 தொகுதிகளின் முடிவு 15-ந்தேதி மதியத்துக்குள் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலையொட்டி, அனைத்து வாக்குச் சாவடிகளையும் கண்காணிக்க ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும், ஓட்டுச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.