பெங்களூரு:
கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீண்டும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்..
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எந்தவொரு தேர்தல் பிரசாரத்திலும் கலந்துகொள்ளாத நிலையில், இன்று கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் களமிறங்குகிறார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் காரணமாக அங்கு அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில், இன்றுமுதல் கர்நாடகா வில் தனது பிரசாரத்தை சோனியாகாந்தி மேற்கொள்கிறார்.
ஏற்கனவே 2016ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில்பிரசாரம் செய்தபோது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்ட சோனியாகாந்தி, கடந்த ஆண்டு நடைபெற்ற பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட்மாநில சட்டமன்ற தேர்தல்களின் போது பிரசாரம் எதுவும் செய்யாமல் ஒதுங்கியிருந்தார். ஆனால், தற்போது கர்நாடகாவில் தேர்தல் நிலவரத்தை கருத்தில் கொண்டு, ஆட்சியை தக்க வைக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட சோனியா முடிவு செய்துள்ளார்.
இன்று கர்நாடகாவின் பிஜப்பூரில் உள்ள சரவாடா கிராமத்தில் நடைபெற உள்ள தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சோனியா பங்கேற்று உரையாற்றுகிறார்.
அதே தொகுதியில் இன்று பிரதமர் மோடியும் பிரசாரம் செய்வது குறிப்பிடத்தக்கது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் களத்தில் சோனியா இறங்கியிருப்பது காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.