சென்னை:
வெளி மாநிலங்களுக்கு சென்று நீட் தேர்வை எழுத உள்ள மாணவர்களின் போக்குவரத்து செலவை தமிழக அரசு ஏற்க உள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் வரும் 6ந்தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கேரளா மற்றும் ராஜஸ்தானில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இது தமிழக மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதி மன்றமும் கைவிரித்து விட்டது.
இந்நிலையில், வெளி மாநிலம் சென்று நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினரும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்வேறு சமூக அமைப்புகள் மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ள நிலையில், நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களை, மாநில அரசு செலவில் அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெளிமாநிலம் சென்று தேர்வை எதிர்கொள்ள உள்ள தமிழக மாணவர்களின் போக்குவரத்து செலவை அரசு ஏற்கப்போவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரிடம் இருந்து எத்தனை மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு தேர்வு எழுத செல்ல வேண்டியது உள்ளது என்பதை குறித்து அறிக்கை கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் நம்பப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதி மன்றம் இந்த ஆண்டு வேறு மாநிலங்களில்தான் தேர்வு எழுத வேண்டும் என்றும், அடுத்த ஆண்டு அவரவர் மாநிலத்திலேயே தேர்வு எழுத சிபிஎஸ்இ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.