பெங்களூரு

ர்நாடக முதல்வர் சித்தராமையா பாஜகவினரை தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக தாக்கி வருகிறார்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக உத்திரப் பிரதேச முதல்வர் யோகியை பிரதமர் மோடி களம் இறக்கி உள்ளார்.    சித்தராமையா தனது டிவிட்டர் பதிவுகள் மூலம் யோகியை மட்டும் இன்றி மோடியையும்  சேர்த்து தாக்கி வருகிறார்.   சித்தராமையாவின் டிவிட்டர் பதிவுகளுக்கு ஒரு தனி வரவேற்பு உள்ளது.

சமீபத்தில் பெல்லாரி தொகுதியில் ஜனார்த்தன் ரெட்டியின் சகோதரருக்காக மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  அதற்கு சித்தராமைய, “அன்புள்ள பிரதமர் மோடிக்கு, தாங்கள் பெல்லாரிக்கு வந்ததில் இருந்து தாங்கள் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கப் போவதற்காக காத்திருக்கிறோம்.  மறக்காமல் ரெட்டியின் ரூ.35000 கோடி ஊழலைப் பற்றியும் குரல் கொடுங்கள்,  எட்டியும் ரெட்டியும் சேர்ந்து உங்கள் ஸ்கோரை 60க்கும் கீழே கொண்டு வருவார்கள்” என பதிந்திருந்தார்.

தேர்தல் பரப்புரையின் போது நேரு, கிருஷ்ண மேனன் மற்றும் திம்மையா பற்றி மோடி தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அளித்த பதிலையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மோடியை சித்தராமையா கிண்டல் செய்துள்ளார்.

உத்திரப் பிரதேசத்தில் சூறாவளிக் காற்றினால் 64 பேர் மரணம் அடைந்தனர்.  பலர் வீடிழந்து தவிக்கின்றனர்.   அதற்கு சித்தராமையா, “சூறாவளியால் 64 பேரை இழந்து தவிக்கும் உத்திரபிரதேச மக்களுக்கு எனது மனமார்ந்த ஆறுதலைக் கூறிக்கொள்கிறேன்.     தற்போழுது உங்கள் முதல்வருக்கு கர்நாடகாவில் பணி இருப்பதால் நான் வருந்துகிறேன்.   விரைவில் இங்குள்ள பணியை முடித்து விட்டு அங்கு பணி புரிய நிச்சயம் அவர் வருவார் என நம்புகிறேன்”  என டிவிட்டரில் பதிந்துள்ளார்.