டில்லி

ராமர் கோவில் வழக்கை விரைந்து முடிக்க கோரிய சுப்ரமணியன் சாமியை ஜூலை மாதம் அணுகுமாறு உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.

ராமர் கோவில் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.  அலகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாக  பிரித்து உரிமை கோரிய மூவருக்கும் அளித்த தீர்ப்பை எதிர்த்து அனைத்து தரப்பும் வழக்கு தொடுத்துள்ளன.   அந்த வழக்குகளோடு சுப்ரமணியன் சாமி இது தொடர்பாக மற்றொரு வழக்கை தொடந்துள்ளார்.

நில உரிமை குறித்த வழக்குகளுக்கு மாற்றாக சுப்ரமணியன் சாமி இந்த வழக்கை தொடுத்துள்ளார்.  இந்த வழக்கு பிரார்த்தனை செய்வதற்கான அடிப்படை உரிமைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ளது.   அதன்படி ராமர் பிறந்த இடம் என கருதப்படும் அயோத்தியில் இந்துக்களுக்கு பிரார்த்தனை புரிய அடிப்படை உரிமை உள்ளது எனவும்  அந்த இடத்தில் கோவில் அமைத்து பிரார்த்தனை செய்ய உத்திரவிடக் கோரியும் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வரும் அமர்வு முன் இன்று சுப்ரமணியன் சாமி ஒரு கோரிக்கை விடுத்தார்.  இந்த வழக்கு தனிப்பட்ட வழக்கு என்பதால் இதை நில உரிமை வழக்குடன் சேர்க்காமல் ஜூலை முதல் விரைவாக நடத்தி முடிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.  அதற்கு உச்சநீதிமன்ற அமர்வு, “இது குறித்து நீங்கள் ஜூலை மாதம் வந்து அமர்வை அணுகலாம்” எனக் கூறி உள்ளது.