நெல்லை :
சங்கரன்கோவிலில் 3வது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் ஏராளமானோர் தங்கள் வீடுகளில் விசைத்தறி நடத்தி வருகின்றனர். இவர்களிடம் இருந்துதான் பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் தங்களது நிறுவனத்துக்கு தேவையான துணிகளை நெய்து வாங்கி வருகின்றனர். இதில் கிடைக்கும் கூலிகளை கொண்டே இந்த நெசவாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த பல வருடங்களாக ஊதிய உயர்வு அளிக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஊதிய உயர்வு குறித்து ஆலைகள் நிர்வாகத்தினரிடம் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் முடிவுபெறாத நிலையில், 60 சதவிகித ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10,000க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நெசவாளர்களின் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கறிது. இதையடுத்து சுமார் 1.5 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.