சென்னை: வாவ் காயின் பெயரில் ரூ. 18 லட்சம் மோசடி செய்த மூவர் மீது சென்னை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.
ஹாங்காங்கை தலைமையிடமாக கொண்டு வாவ் காயின் நிறுவனம் செயல்படுகிறது. இது இணையதளம் மூலம் பயன்படுத்தப்படும் பணம் ஆகும்.
“இந்த திட்டத்தில் சட்டவிரோதமான கருப்புப் பணம் முதலீடு செய்யப்படுகிறது. வருமான வரித்துறையினருக்கு தெரியாமல் இருக்க ஆன்லைனில் முதலீடு செய்யப்படுகிறது. வாவ் காயின் திட்டத்தில் பணம் முதலீடு செய்தால் பலமடங்கு பெருகும்” என்று சென்னையில் சிலர் மக்களை ஏமாற்றிவருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
ஆசை வார்த்தைகளை நம்பி, சென்னையைச் சேர்ந்த இந்திராணி உள்ளிட்டோர் ரூ.18 லட்சம் வரை இந்த இணையதளத்தில் முதலீடு செய்தனர். இந்நிலையில் வாவ் காயின் ஏஜென்ட்கள் வாங்கிய பணத்தையும் தராமல் இழுத்தடிப்பதால் சந்தேகம் அடைந்த இந்திராணி அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வாவ் காயின் பெயரில் மோசடி செய்ததாக பத்மஜ் பொம்முசெட்டி சீனிவாசலு, ஆர்த்தி, கிலின் ஜோசப் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.