சென்னை:

முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான கட்ஆப் மதிப்பெண்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவக்கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் முதுகலைமருத்துவம் படிக்கும் விரும்புபவர்கள் நீட் தேர்வு எழுதியே தேர்வு செய்யப்படுகிறார்கள்.  சமீபத்தில் நடைபெற்று முடிந்த  நீட் நுழைவுத் தேர்வின் அடிப்படையில், முதுகலை மருத்து மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

இந்நிலையில் பெரும்பாலான மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் காலியாக இருந்தன. அதை கருத்தில்கொண்டு  மாணவர் சேர்க்கைக்கான கட் ஆஃப் மதிப்பெண்ணை 15 விழுக்காடு குறைப்பதாக சி.பி.எஸ்.இ. அறிவித்தது.

இதனடிப்படையில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான,  புதிய கட் ஆஃப் மதிப்பெண்கள் வெளியிடப்பபட்டுள்ளது.

அதன்படி  பொதுப்பிரிவினரில் 262 முதல் 320 மதிப்பெண்களும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரில்  225 முதல் 280 மதிப்பெண்களும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 224 முதல் 299 வரையிலும் புதிய கட் ஆஃப் மதிப்பெண்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த மதிப்பெண்ணை பெற்று இதற்கு முன்பு விண்ணப்பிக்காதவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.