சென்னை:

நாளை மே1ந்தேதி தொழிலாளர்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைத்திடும் தொழிலாளர்கள், அனைத்து நலன்களையும் பெற்று வளமாக வாழ வேண்டும் என்று  கூறி உள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

உழைக்கும் மக்களின் சிறப்பினை உலகிற்கு பறைசாற்றும் தினமான மே தின நன்னாளில், உலகெங்கிலும் வாழும் தொழி லாளர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த “மே தின”  நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு, உலகை வாழ வைக்கும் உழைப்பாளர்கள், தங்கள் உரிமைகளை வென்றெ டுத்த திருநாளாகவும், உடல் உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்தும் திருநாளாகவும் மே தினத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

புரட்சித்தலைவி அம்மா, “உழைப்புக்கு என்றும் உயர்வு உண்டு. உழைப்பின் உயர்வில்தான் உண்மையான மனநிறைவு கிடைக்கும் என்பதை உணர்ந்து நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி உங்களுக்கே” என்றுரைத்த அமுதவாக்கை நெஞ்சில் பதித்து, அனைவரும் கடினமாக உழைத்தால் வாழ்வில் மேன்மை அடையலாம்.

நாட்டின் வளர்ச்சிக்காவும், பொருளாதார முன்னேற்றத்திற்காக வும் தங்கள் உதிரத்தை வியர்வையாக சிந்தி உழைத்திடும் தொழிலாளர் பெருமக்கள் அனைவரும், எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, எனது அருமை தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த “மே தின” நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.