போபால்:
பாஜக.வினர் எப்படி வாக்கு சேகரிக்க வேண்டும்? என்று மத்திய பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல் அக்கட்சியின் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கிய வீடியோ வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், ‘‘தேவையுள்ள மற்றும் ஊட்டச்சத்து குறைவான குழுந்தைகளை தத்தெடுத்தால் மட்டுமே நீங்கள் வாக்குகளை பெற முடியும். இது குறித்து பிரச்சாரம் நடத்தி மற்றவர்களையும் இதில் இணையச் செய்ய வேண்டும். அப்போது தான் பிரதமர் மோடியின் 2022ம் ஆண்டு கனவு நிறைவேறும்’’ என்று பேசியுள்ளார்.
கவர்னரின் இந்த பேச்சக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினர் விவேக் தங்கா இது குறித்து டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,‘‘ கவர்னர் மத்திய பிரதேசத்தில் அரசியலமைப்பு பதவியில் உள்ளார். அவர் பொது இடத்தில் கட்சி பணியாற்றக் கூடாது. இதை ஜனாதிபதி கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
சாத்னா மாநகராட்சி மேயர் மம்தா பாண்டே மற்றும் இதர கட்சி நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட காட்சி வீடியோவில் இடம்பெற்றுள்ளது. கவர்னரின் பேச்சுக்கு மேயர் மம்தா பதில் கூறுகையில், ‘‘ஏற்கனவே அங்கன்வாடி குழந்தைகள் பலரை தத்தெடுத்துள்ளேன்’’ என்று கூறும் காட்சியும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.