விருதுநகர்:
அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், கவர்னர் அமைத்த விசாரணை கமிஷன் நீதிபதி, சந்தானம் ஐஏஎஸ், இதுவரை நடத்தி விசாரணை குறித்து அறிக்கை தயார் செய்து வருகிறார்.
இதுவரை 2 கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், 3வது கட்ட விசாரணையை தொடங்க கவர்னர் மாளிகையில் கால அவகாசம் கோரி உள்ளார்.
விசாரணை வளையம் பெரிதாகிக்கொண்டே செல்லும் நிலையில், கருப்பசாமி, முருகன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ள இருப்பதால், விசாரணைக்கு மேலும் அவகாசம் தேவைப்படும் என்று கருதியுள்ள சந்தானம், அதுகுறித்து கவர்னர் மாளிகையில் அவகாசம் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைப்பு விடுத்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கைது செய்யப்பட்ட நிர்மலாதேவி தற்போது மதுரையில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, மேலும் பல பல்கலைக்கழக அதிகாரிகள், அருப்புக்கோட்டை கல்லூரி அலுவலர்கள், புகார் கூறிய மாணவிகள் உள்பட பலரை சந்தித்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தற்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் உள்ள பேராசிரி யர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரிடமும் விசாரணை நடத்த சந்தானம் தலைமையிலான குழுவினர் திட்ட மிட்டுள்ளனர். அதற்காக சிறைத்துறை அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இதுவரை நடைபெற்ற 2 கட்ட விசாரணை மற்றும் பெறப்பட்டுள்ள ஆவனங்கள், ஆதாரங்களைக் கொண்டு அறிக்கை தயாரிக்கும் பணியில் சந்தானம் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார்.
ஆனால், விசாரணைக்கு 2 வார காலம் மட்டுமே கவர்னர் அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது மேலும் பலரிடம் விசாரணை நடத்த வேண்டியதிருப்பதால், கவர்னரிடம் காலஅவகாசம் கேட்டுள்ளதாகவும், இதுவரை பெறப்பட்டுள்ள வாக்கு மூலம் அடிப்படையில் ரகசியமாக அறிக்கை தயார் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.