பெங்களூரு
கர்நாடகா தேர்தலில் போட்டியிடும் 3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அவர்களின் முன்னாள் காதலிகள் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.
வரும் மே மாதம் 12 ஆம் தேதி கர்நாடகா சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் கட்சிக்காக ஓட்டி வேட்டையில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இதற்கிடையில் எதிரான பிரச்சாரங்களும் குறைவின்றி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புதுமையான எதிர் பிரசாரங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பாஜக சார்பில் போட்டியிடும் சட்டமன்ற உறுப்பினர்கள் ரேணுகாச்சாரியா, ராமதாஸ் மற்றும் காங்கிரசை சேர்ந்த மேத்தி ஆகியோருக்கு எதிராக அவர்களின் முன்னாள் காதலிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த முன்னாள் காதலிகள் தங்களை இவர்கள் ஏமாற்றியதாக பிரச்சாரத்தில் கூறி வருகின்றனர்.
நர்ஸ் ஜெயலட்சுமி என அழைக்கப்படும் ஜெயலட்சுமி கடந்த 2007 ஆம் ஆண்டு செய்தித்தாள்களில் பரப்பரப்பு செய்திகளை தந்தவர். இவர் தன்னிடம் அப்போது பாஜக அரசில் அமைச்சராக இருந்த ரேணுகாச்சாரியா பாலியல் உறவு வைத்திருந்ததாகக் கூறி அவர் தன்னை முத்தமிடும் புகைப்படங்களை வெளியிட்டார். அதன் பிறகு 2010 ஆம் வருடம் தன் புகாரை திரும்பப் பெற்றார். ஆயினும் அவருக்கு எதிராக பொது வாழ்வில் அளம் இறங்கி பெண்கள் முன்னேற்றக் கட்சியில் இணைந்தார். ரேணுகாசாரியாவுக்கு எதிராக அவர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கோரினார். ஆனால் அவருக்கு வேறு தொகுதி ஒதுக்கப்ப்பட்டது. அதை தனக்கு இழைக்கப்பட்ட அநீதி எனக் கூறி ரேணுகாச்சாரியாவுக்கு எதிராக ஜெயலட்சுமி பிரசாரம் செய்து வருகிறார்
பாஜகவின் மற்றொரு அமைச்சரான ராமதாஸ் கடந்த 2014 ஆம் வருடம் தன்னை திருமணம் செய்துக் கொண்டார் என பிரேமகுமாரி என்னும் பெண் கூறினார். பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி தனக்கும் ராமதாசுக்கும் ரகசிய திருமணம் நடந்ததாக பிரேமகுமாரி தெரிவித்தார். இது பொய் எனக் கூறி ராமதாஸ் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த பரபரப்புக்குப் பின் ராமதாசுக்கு எதிராக இந்த தேர்தலில் நிற்கப்போவதாக கூறி வந்த பிரேமகுமார் இந்திய புதிய காங்கிரஸ் என்னும் கட்சி சார்பில் போட்டியிட முயன்றார். சின்னம் ஒதுக்குவதில் ஏற்பட்ட தாமதத்தினால் அவரால் போட்டியிட முடியவில்லை. தற்போது பிரேமகுமாரி தனது முன்னாள் காதலர் ராமதாசுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறார்.
காங்கிரஸ் அமைச்சரவையில் கலால் துறை அமைச்சராக இருந்த மேத்தி என்பவர் விஜயலட்சுமி என்னும் ஒரு பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வதாக வெளியான சிடி கடந்த 2016ஆம் ஆண்டு வைரலானது. அதனால் அவர் பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. சில மாதங்களில் சிஐடி பிரிவு அவர் மீது குற்றமில்லை என கூறியது. இதனால் மனம் உடைந்த விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்று பின் உயிர் பிழைத்தார். தற்போது மேத்தியின் தொகுதியில் போட்டியிட சரியான வேட்பாளர் கிடைக்காததால் காங்கிரஸ் மீண்டும் அவரை களத்தில் இறக்கி உள்ளது. தற்போது அவருக்கு எதிராக விஜயலட்சுமி பிரசாரத்தில் இறங்கி உள்ளார்.