வாஷிங்டன்:
ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவிற்கு பொருளாதார தடையை அமெரிக்கா விதிக்க கூடாது என அந்நாட்டு எம்.பி.க்கள் கூறிஉள்ளார்.
வாஷிங்டன்னில் இந்தியா – அமெரிக்கா நட்புறவு குறித்த நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துக்கொண்ட எம்.பி.க்களும், வல்லுனர்களும் இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பு என்பது இருநாட்டு உறவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்தனர்
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜோ குரோலே பேசுகையில், “அமெரிக்காவின் எதிரிகளை எதிர்க்கும் சட்டம் முக்கியமான விவகாரமாகும். இதனை சீர்படுத்த வேண்டும். இந்தியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்தியாவின் மீது பொருளாதார தடையை விதிக்க கூடாது என்பது தான் நமது நோக்கமாக இருக்க வேண்டும்’’என்றார்.
மேலும், அவர் பேசுகையில், ‘‘ஜனநாயகத்திற்கு எதிராக உலகில் ஸ்திரமற்ற நிலைமையை உருவாக்கும் செயலை ரஷ்யா செய்கிறது. அதனால் அந்நாட்டிற்கு எதிராக பொருளாதார தடை விதிப்பது என்பது முக்கியமானது. இந்தியா தற்பாதுகாப்பு தேவையான நாடு என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்’’என்றார். இதேபோல் நிகழ்ச்சியில் பேசிய பல எம்.பி.க்களும் இந்தியாவுக்கு ஆதரவாக பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.