டில்லி:

சர்வதேச அளவில் பத்தரிக்கை சுதந்திரத்தில் இந்தியா பின்தங்கி 136வது இடத்தை பிடித்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

180 நாடுகளில் பத்திரிக்கையாளர்களுக்கான சுதந்திரம், ஊடக ஒடுக்கு முறைகளை அடிப்படையாக கொண்டு ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் போர்டர்ஸ் 2017-ம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தரவரிசைப் பட்டியலில் நார்வே முதலிடத்தையும், வடகொரியா கடைசி இடத்தையும் அதாவது 180வது இடத்தை பிடித்து உள்ளது. இந்தியா தொடர்ச்சியாக பின்னடைந்து வருகிறது.

2017-ல் பெங்களூருவில் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி உள்ளது. இந்தியா 2016-ம் ஆண்டு 133 வது இடம் பிடித்தது. 2017-ம் ஆண்டு இவ்வரிசையில் 136 வது இடத்திற்கு பின்தங்கியது.

அதில், ‘‘இந்திய அரசியலமைப்பு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் வழங்குகிறது, ஆனால் பத்திரிக்கை சுதந்திரம் தொடர்பாக அதில் எந்தஒரு வரையறையும் கிடையாது. இந்திய அரசு பொதுவாக இந்த உரிமைகளுக்கு மதிப்பளிக்கிறது. இருப்பினும் அரசை விமர்சனம் செய்யும் ஊடகங்கள் அழுத்தம் அல்லது தொந்தரவை சந்திக்கும் நிகழ்வும் உள்ளது’’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘‘தேசவிரோத எச்சரிக்கை, இந்து தேசியவாதம் ஆகியவற்றால் 2018- தரவரிசையில் இந்தியா பின்தங்கியுள்ளது.
இந்தியாவில் அரசை விமர்சனம் செய்யும் செய்தியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்தியாவில் செய்தியாளர்கள் கொலை, நேரடியான தாக்குதல், மிரட்டல்கள் மற்றும் பல்வேறு நிலைகளில் இருந்து வரும் அழுத்தம் காரணமாக மீடியாக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இந்தியாவில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ 21 செய்தியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.