புனே:

சென்னையை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றின் சார்பாக புனேவுக்கு கல்விச்சுற்றுலா சென்ற மாணவர்களில் 3 பேர் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு சுற்றுலா சென்ற நிலையில், அங்குள்ள ஏரி ஒன்றில் குளிக்க முயன்றபோது நீரில் மூழ்கி 3 மாணவர்கள்  இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் இசிஐ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த 23ம் தேதி தனியார்  தொண்டு நிறுவனத்தின் உதவி யுடன் விமானம் மூலம் மகாராஷ்டிர மாநிலம் புனேக்கு கல்விச் சுற்றுலா சென்றனர்.

இந்நிலையில் அந்த மாணவர்கள் புனே பகுதியில் உள்ள ஏரி ஒன்றில்குளித்தபோது எட்டாம் வகுப்பு மாணவர்களான சந்தோஷ், சரவணக்குமார், டேனிஸ்ராஜா ஆகியோர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையறிந்த மற்ற மாணவர்களும், ஆசிரியர்களும் அவர்களை மீட்க முயற்சி செய்தனர். ஆனால், அதற்குள் அவர்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டனர். இதையடுத்து அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஏரியில் மூழ்கி இறநத் மாணர்களின் உடல்களை தேடினர். இதில் டேனிஸ் ராஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மற்ற 2 மாணவர்களான கே.சந்தோஷ் மற்றும் சரவணா உடலையும் தேடி வருகின்றனர்.

இது குறித்து அந்த மாணவர்களின்  பெற்றோருக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் புனே விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.