சென்னை:

சென்னை அருகே மதுபானக் கடை திறக்க வேண்டாம் என அந்த பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடும் எதிர்ப்பை மீறி மதுபானக் கடையை திறக்க அரசு முயற்சித்து வந்தது.

இதன் காரணமாக வெகுண்டெழுந்த அந்த பகுதி மக்கள் திரளாக வந்து, அந்த மதுபானக் கடையை அடித்து நொறுக்கினர். இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை அருகே உள்ள  திருநீர்மலை பகுதியில்,கோவில் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க அரசு முயற்சி மேற்கொண்டு வந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால், அதை காதில் போட்டுக்கொள்ளாத டாஸ்மாக் நிர்வாகம், மக்கள் எதிர்ப்பை மீறி கடையை திறக்க தேவையான மதுபாட்டில்கள் மற்றும் பொருட்களை கொண்டு வந்து இறக்கினர்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் வெகுண்டெழுந்தனர்.  பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் அந்த கடைக்குள் புகுந்து கடையை அடித்து நொறுக்கினர்.

இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் 20க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பலரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.