தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 18 கிராம மக்கள் கண்டன பேரணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் சுற்றுசூழல் மாசுபடுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டி, அந்த ஆலையை மூடக்கோரி சுற்றுவட்டார மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

 

அதிலும் கடந்த இரு மாதங்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை தீவிரமாக நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று, 18 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பேரணியினை துவக்கி இருக்கின்றனர்.

மடத்தூரிலிருந்து பேரணியை துவங்கி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோக்கி சென்றனர். பேரணியாக சென்ற கிராம மக்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கிராம மக்களின் இந்த பேரணியால் தூத்துக்குடியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.