டில்லி:
இரண்டாம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ பள்ளிக்குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் எதுவும் கொடுக்கக்கூடாது என தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழுமம் (National Council Of Educational Research And Training) அறிவித்து உள்ளது.
குழந்தைகள் பாடப்புத்தங்களை சுமந்து செல்வதை தடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் சிபிஎஸ்இக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழுவின் பாடத்திட்ட விதிகளை மீறி சிபிஎஸ்இ பள்ளிகள் பாடங்களை போதிக்கின்றன என்றும், இதன் காரணமாக குழந்தைகள் மனப்பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்றும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழுமம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு, இரண்டாம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் எதுவும் கொடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நடைமுறையை நாடு முழுவதும் உள்ள 18 ஆயிரம் சிபிஎஸ்இ பள்ளிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழு செயலாளரும் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.