
டில்லி :
தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்த மதுரை உயர்நீதி மன்றம் தடை விதித்திருந்த நிலையில், தடை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதில், தேர்தலை நடத்த உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றம் மதுரை கிளை விதித்த தடையை நீக்கியும் உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடப்பதாக 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் மதுரை உயர்நீதி மன்ற கிளை தேர்தல் நடத்த தடை விதித்திருந்து.
தமிழகத்தில் உள்ள 18,435 கூட்டுறவு சங்கங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி இரு கட்ட தேர்தல்கள் முடிவடைந்து உள்ளன. இந்நிலையில், தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரரித்த நீதிமன்றம், தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்கவும், 3, 4, மற்றும் 5 வது கட்ட தேர்தல்களை நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டது.
மதுரை உயர்நீதிமன்ற கிளையை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கூட்டுறவு தேர்தல் ஆணையம் தாக்கல் செய்திருந்த மனுவில் 2 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதால் தேர்தலை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கூறியிருந்தது.
ஆனால் திமுக தரப்பு வழக்கறிஞர், 1 லட்சத்து 40,00 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் வெறும் 70,000 மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கூட்டுறவு சங்க தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் தேர்தலை நடத்த அனுமதி வழங்க கூடாது என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதி மன்றம், தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
மேலும், வழக்கு முடியும் வரை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது எனவும், வழக்கு தொடர்பான பிரமாணப் பத்திரங்களை கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம், தமிழக அரசு, திமுக எம்எல்ஏ சக்கரபாணி ஆகியோர் மே 3ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[youtube-feed feed=1]