பெங்களூர்:

ர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் மே மாதம் 12ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் வேட்பாளர்களை அறிவித்து பரபரப்பான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த ஆய்வின்போது, போட்டியிடுபவர்களில்  277 பேர் கோடீஸ்வரர்கள் என்றும், 95 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து நடத்திய ஆய்வில் 277 பேர் கோடீஸ்வரர்கள், 95 பேர் மீது கிரிமினல்கள் குற்றச்சாட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்க பாஜகவும், தற்போதுள்ள ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள காங்கிரசும் கடும் போட்டியில் உள்ளன. ஆனால், கருத்துக்கணிப்போ எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்று தெரிவித்து உள்ளது.

இந்நிலையில்,  224 சட்டமன்ற தொகுதிகளை உள்ள கர்நாடகாவில்,  காங்கிரஸ் இதுவரை  218 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.  பா.ஜனதா சார்பில்  224 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின்  தொழில் மற்றும் அவர்கள்  பின்னணி குறித்து  ஜனநாயக மறு சீரமைப்புக்கான கூட்டமைப்பினர் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

அதில் காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 218 வேட்பாளர்களில் 148 பேர் ஏற்கனவே போட்டியிட்டவர்கள். அவர்களுக்கு மீண்டும் காங்கிரஸ் கட்சி வாய்ப்பு கொடுத்துள்ளது என்றும், இவர்களில் 34 பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள் என்று தெரிவித்து உள்ளது.

அதுபோல, பாரதியஜனதா அறிவித்துள்ள 224  வேட்பாளர்களில்,  97 வேட்பாளர்களின் சொத்து மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின்  மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் 58 வேட்பாளர்களில் 46 பேர் கோடீஸ்சுவரர்கள்  என்றும் கூறப்பட்டுள்ளது.

கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்தில்,   கோவிந்தராஜ் நகரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்  பிரியா கிருஷ்ணா உள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ.910 கோடி. காங்கிரசைச் சேர்ந்த இவர் தான் பணக்கார வேட்பாளர்களில் முதல் இடத்தில் உள்ளார்.

2வது இடத்தில் மற்றொரு காங்கிரஸ் வேட்பாளர் நாகராஜு உள்ளார். ஹொச கோட்டே தொகுதியில் போட்டியிடும் இவரது சொத்து மதிப்பு ரூ.470 கோடி.

3வது இடத்தில் பெல்லாரியில் போட்டியிடும் அனில் எச். வாட் என்பவர் இருக்கிறர். அவரின் சொத்து மதிப்பு ரூ.288 கோடி ஆகும்.

பா.ஜனதா வேட்பாளர்களில் என்.எஸ். நந்தி ஈஷா ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.118 கோடியாகும். கே.ஆர்.புரத்தில் போட்டியிடும் இவர்தான் அந்த கட்சியில் அதிக சொத்து மதிப்பு கொண்டவர்.

பசவன குடியில் போட்டியிடும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளர் கே.பாகே கவுடாதான் அந்த கட்சியின் பணக்கார வேட்பாளர். இவரது சொத்து மதிப்பு ரூ.250 கோடி.

காங்கிரஸ் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.28 கோடி என்றும், பா.ஜனதா வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.8 கோடி என்றும், மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.14 கோடி என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்,  காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 48 பேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதில் 23 பேர் மிக கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல  பா.ஜனதா வேட்பாளர்களில்  30 பேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும்,  மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்களில் 17 பேர் மீதும், கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளன என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.