சிருங்கேரி

முன்னாள் பிரதமர் தேவே கவுடா மனைவியுடன் ஹெலிகாப்டரில் சென்று சங்கராச்சாரியாரிடம் வேட்பு மனுவைக் கொடுத்து ஆசி பெற்றுள்ளார்.

முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவருமான தேவே கவுடாவுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு.   அதைவிட ஜோசியத்தின் மீது இன்னும் அதிக நம்பிக்கை உண்டு.   இவர் தனது கட்சியின் வேட்பாளர்களையும் அவர்களது ஜாதகத்தை பரிசீலித்த பிறகே தேர்ந்தெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.    நபர்களை நம்பாமல் நட்சத்திரங்களை கவுடா நம்புகிறார் என கர்நாடக மக்கள் பலமுறை கேலி செய்தது உண்டு.

ஆதி சங்கரரால் 1300 வருடங்களுக்கு முன்பு சிருங்கேரியில் அமைக்கப்பட்டது சிருங்கேரி சங்கர மடம்.   தற்போது ஸ்ரீ பாரதி தீர்த்த சாமி இங்கு மடாதிபதியாக உள்ளார்.   இந்த மடத்துக்கு நேற்று ஹெலிகாப்டர் மூலம் தேவே கவுடா தனது மனைவியுடன் வந்தார்.   சங்கராச்சாரியாரிடம் தனது வேட்புமனுவைக் கொடுத்து ஆசி பெற்றார்.   அங்கு ஆதிசங்கரரால் அமைக்கப்பட்ட ஸ்ரீசாரதாம்பாள் சன்னதிக்கு சென்று அம்பாளின் காலடியில் தனது வேட்புமனுவை வைத்து வழிபட்டுள்ளார்.

சங்கராச்சாரியாரை தரிசித்த பிறகு செய்தியாளகளை கவுடா சந்தித்தார்.   அப்போது அவர், “நான் கடவுள் மீதும் கடவுளின் சக்தி மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன்.   மனிதர்கள் என்னை பலமுறை ஏமாற்றி உள்ளனர்.  எனக்கு பலர் துரோகம் இழைத்துள்ளனர்.  அப்போதெல்லாம் கடவுள் தான் என்னையும் எனது கட்சியையும் காப்பாற்றினார்”  எனக் கூறி உள்ளார்.

தேவே கவுடாவின் மகனான ரேவண்ணா,  திருப்பதிக்கு சென்று  பெருமாள் காலடியில் தனது வேட்புமனு வை வைத்து வணங்கி உள்ளார்.  அதன் பிறகு தமிழ் நாட்டில் உள்ள ஸ்ரீரங்கம் சென்று அங்கும் வணங்கி உள்ளார்.  அவர் செய்தியாளர்களிடம் “வாக்களிப்பு சனிக்கிழமையில் நடைபெறுகிறது.   வாக்கு எண்ணிக்கை அமாவாசை அன்று நடைபெறுகிறது.   இரண்டும் எங்கள் குடும்பத்துக்கு உகந்த நாள்.  எனவே கடவுளின் ஆசிகள் எங்களுக்கு உண்டு என தெரிந்துக் கொண்டு கடவுளை வணங்கி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

ஒரு சில தினங்களுக்கு முன்பு சிருங்கேரி சங்கராச்சாரியாரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும்  முதல்வர் சித்தராமையாவும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.