சென்னை:

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில்,  விரைந்து தீர்ப்பை வழங்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தேவராஜன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை உடனே வழங்க வேண்டும் அல்லது, அந்த தொகுதிகளுக்கு விரைவில்  தேர்தல் அறிவிக்க வேண்டும் என்று  கூறி உள்ளார்.

ஜெ.மறைவை தொடர்ந்து இரண்டாக பிரிந்த அதிமுக, பின்னர் ஓபிஎஸ்-ன் நிபந்தனைகளை ஏற்று ஒன்றானது. அதையடுத்து, சசிகலா தரப்பினர் கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக,  18 எம்எல்ஏக்கள், எடப்பாடிக்கு எதிராக அப்போதைய தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவிடம்  கடிதம் கொடுத்தனர். இது கட்சி கொறடாவின்  உத்தரவை மீறிய செயல் என்று, அவர்களை கட்சி கொறடா அறிவுறுத்தலின் பேரில், கடிதம் கொடுத்த 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர்  உத்தரவு வழங்கினார்.

இதனை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த செப்டம்பர் மாதம் முதல்  விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணை முடிவடைந்த நிலை யில், ஜனவரி 22ந்தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய உயர்நீதி மன்றம் அறிவுறுத்தி யிருந்தது. அதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

அதையடுத்து, தீர்ப்பை ஒத்தி வைப்பதாக  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமை யிலான முதலாவது அமர்வு  கடந்த ஜனவரி 23ந்தேதி அறிவித்தது.

தீர்ப்பு ஒத்தி வைத்து இரண்டு மாதங்களுக்கு மேலாகி உள்ள நிலையில், தீர்ப்பை உடனே வழக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.