திருவாரூர்:

“லைஃப்பே இல்லாமல் போகிறதே என விவசாயிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் போராடிவரும் நிலையில், வைஃபை திட்டம் தேவையா” என தமிழக அரசை காட்டமாக விமர்சித்துள்ளார் தே.மு.தி.க. மகளிரணி தலைவர் பிரேமலதா.

மெரினா கடற்கரை மற்றும் திருச்சி, மதுரை, சேலம், கோவை ஆகிய பேருந்து நிலையங்களில் வை-பை வசதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருவாரூரில் தே.மு.தி.க சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விஜயகாந்த், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பச்சை நிற சட்டை அணிந்துவந்தார்.

இந்த ஆர்பாட்டத்தில் பேசிய பிரேமலதா, “தமிழகத்தின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தே.மு.தி.க-தான் முதன்முதலில் குரல்கொடுக்கும் கட்சியாக உள்ளது. 5 முறை முதல்வராக இருந்தவர் கருணாநிதி. ஆனால், தனது திருவாரூர் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை. நாங்கள் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.  ஊருக்கே ராஜாவாக இருந்தாலும் அவருக்குத் தட்டில் சோறு கிடைக்கப் பாடுபடும் முதலாளிகள்தான் விவசாயிகள். உழவன் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும்.

பாஜகவிற்கு கர்நாடகம் மட்டுமன்றி இந்தியா முழுமையும் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் நோக்கம். ஸ்கீம் என்ற ஒரு வார்த்தையைக் காட்டி, தமிழக மக்களின் தண்ணீர்ப் பிரச்னையை மத்திய அரசு புறக்கணிக்கிறது. இதுபோல  மக்களுக்குப் புரியாத வார்த்தையைச் சொல்லி விவசாயிகளை ஏமாற்றும் மத்திய அரசைக் கண்டிக்கிறோம். மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கிறது. தேமுதிக நீதித்துறையின் மீதும் காவல்துறையின் மீதும் மரியாதை வைத்துள்ள கட்சி. வரும் 9ஆம் தேதி, உச்ச நீதிமன்றத்தில் வர இருக்கும் வழக்கு விசாரணையில், தீபக் மிஸ்ரா நிச்சயமாக நியாயத்தைத் தருவார் என்று நம்புகிறோம்.

காவிரிப் பிரச்னை, மீனவர் பிரச்னை, ஸ்டெர்லைட், நியூட்ரினோ எனத் தமிழகம் போராட்டக்களமாக மாறிவிட்டது. இதற்குக் காரணம், தமிழகத்தை ஆண்ட கட்சிகளும் ஆளும் கட்சிகளும்தான். இதை மறைத்துவிட்டு போலித்தனமான போராட்டங்களை அவர்கள் நடத்திவருகின்றனர். உண்ணாவிரதம் என்று சொல்லி மக்களை முட்டாளாக்குகின்றனர். உண்ணாவிரதம் இருந்து, உண்ணாவிரதப் பந்தலுக்குப் பின்னால் நின்று சாப்பிடுகின்றனர். இதற்கு வெட்கப்பட வேண்டும்.

இன்று, தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு மத்தியில் வைஃபை திட்டத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார். லைஃப்பே இல்லாமல் போகிறதே என விவசாயிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் போராடிவரும் நிலையில், வைஃபை திட்டம் தேவையா” என்று தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார் பிரேமலதா.