சென்னை:

ண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே. சூரப்பா நியமிக்கப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் சிறந்த பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடந்த 2 ஆண்டுகளாக துணை வேந்தர்  நியமிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்ட நிலையில், தற்போது, பெங்களூர் ஐஐஎஸ்சியைச் சேர்ந்த சூரப்பாவை புதிய துணைவேந்தராக ஆளுநர் நியமித்து உள்ளார்.

இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவிரி பிரச்சினை காரணமாக  தமிழக்ததில் கொந்தளிப்பான சூழல் நிலவி வரும் நிலையில், கர்நாடகாவை சேர்ந்த ஒருவரை அண்ணா பல்கலைக்க ழகத்துக்கு துணைவேந்தராக  நியமித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு , தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது,

“காவிரிப் பிரச்சினை கொளுந்து விட்டு எரிகின்ற நேரத்தில், தமிழகமே போர்க்கோலம் பூண்டிருக்கும் தருணத்தில்,கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்த திரு எம்.கே. சூரப்பா என்பவரை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமித்தி ருக்கும் மாண்புமிகு தமிழக ஆளுநரின் செயல் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.

மண்ணின் மைந்தர்களாக இருக்கும் கல்வியாளர்களை யும் அறிஞர்களையும் இழிவுசெய்யும் உள்நோக்கத்துடன் வெளி மாநிலங்களில் இருந்து வரிசையாக துணை வேந்தர் பதவிகளுக்கு இறக்குமதி செய்து தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களை “காவி” மயமாக்க வேண்டாம்” .

இவ்வாறு ஸ்டாலின் கூறி உள்ளார்.

ஏற்கனவே, தமிழகத்தில் உள்ள  அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு புனே பல்கலைக்கழகத்தில் பணி புரிந்து வந்த சூரிய நாராயண சாஸ்திரியை நியமித்ததற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கன்னடர் ஒருவரை நியமனம் செய்திருப்பது தமிழகத்தில் ஆளுநர் மீது தமிழக மக்களின் அதிருப்தி மேலும் வலுத்து வருகிறது.