டில்லி
தற்போது நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அலுவல்கள் நடைபெறாத 23 நாட்களுக்கான உறுப்பினர்கள் ஊதியத்தை தங்கள் கட்சி விட்டுத் தராது என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் காங்கிரஸ், அதிமுக மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் நடத்திய அமளிகளால் அலுவல் நடக்காமல் முடங்கிப் போனது. இவ்வாறு முடங்கிப் போன 23 நாட்களுக்கன பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை தேசிய ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் விட்டுத் தருவார்கள் என அமைச்சர் ஆனந்த குமார் தெரிவித்திருந்தார்.
இதற்கு அக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கட்சியின் சார்பாக சிவசேனா பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த் சாவந்த், “நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊதிய விவகாரம் குறித்து பாஜக எங்களிடம் விவாதிக்கவில்லை. பாஜகவுக்கு ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நேரங்களில் மட்டுமே கூட்டணிக் கட்சிகளின் நினைவு வருகிறது.
சிவசேனா கட்சியைப் பொறுத்த வரையில் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சரியாக பணி புரிகின்ரனர். நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறாவிடினும் அமச்சகக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. அவற்றில் எங்கள் கட்சி உறுப்பினர்கள் கலந்துக் கொள்கிறார்கள். எனவே நாங்கள் ஊதியத்தை விட்டுத் தர மாட்டோம்” எனக் கூறி உள்ளார்.