டில்லி:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை முடக்குவோம் என்றும், அடுத்த கூட்டத் தொடரையும் முடக்குவோம் என்று அதிமுக எம்.பி.யான நாடாளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை எம்.பி. கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்தியஅரசுக்கு எதிராக நாடாளுமன்ற இரு அவைகளிலும் அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக காரணமாக நாடாளுமன்றம் 20வது நாளாக முடங்கி உள்ளது.
இந்நிலையில் இன்றும் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்.பி. தம்பித்துரை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை முடக்குவோம். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிக்க வேண்டும், தற்போது 20 நாட்களாக பாராளுமன்றத்தை முடக்கி வருகிறோம் என்றார்.
காவிரி வாரியம் அமைக்காவிட்டால், மத்திய அரசை கண்டித்து, அடுத்த கூட்டத்தொடரிலும் போராட்டம் தொடரும் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம் என்றார்.
மேலும் செய்தியளார்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் அறவழி போராட்டம் நடத்துவது வரவேற்கத்தக்கது என்றும் கூறினார்.