பெங்களூரு:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஆகியரின் திரைப்படங்களை கர்நாடகத்தில் வெளியிட விட மாட்டோம் என்று வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார். இதையடுத்து காவிரி விவகாரத்தில் ரஜினி தனது கருத்தை மாற்றிக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போதைய சூழ்நிலை போலவே காவிரி விவகாரம் பெரிதாக வெடித்தபோது, கர்நாடகத்தில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டனர். அப்போது நடிகர் ரஜினிகாந்த், கலவரம் செய்பவர்களை உதைக்கணும் என்று பேசினார்.

அந்த நேரத்தில் அவரது குசேலன் திரைப்படம் வெளியானது. அப்படத்தை  கர்நாடகத்தில் வெளியிட அனுமதிக்க முடியாது என்று வாட்டாள் நாகராஜ் உட்பட கன்னட வெறியர்கள் அறிவித்தனர்.

உடனே கர்நாடகம் சென்ற ரஜினி, தான் அப்படி பேசியது தவறு என்றும், கர்நாடக மக்கள் வீரத்தைக்காட்ட வேண்டும் என்றும் அதற்கு தான் துணையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அவரது குசேலன் படம், கர்நாடக மாநித்தில் திரையிடப்பட்டது.

தற்போது அதே போன்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று நேற்று கர்நாடகத்தில் போராட்டம் நடத்தினார் வாட்டாள் நாகராஜ். அப்போது அவர், “காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தும் ரஜினி, கமல் ஆகியோர் படங்களை கர்நாடகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம்” என்று அறிவித்துள்ளார்.

வரும் 27ம் தேதி ரஜினியின் காலா திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து அவரது 2.0 திரைப்படம் வருகிறது.

ஆகவே குசேலன் படம் வெளியான நேரத்தில் தனது கருத்தை மாற்றிக்கொண்டு கன்னட வெறியர்களிடம் மன்னிப்பு கேட்டது போல தற்போதும் ரஜினி மன்னிப்பு கேட்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாகுபலி படத்தில் நடிகர் சத்யராஜ் நடித்திருந்ததால் அப்படத்தை கர்நாடகத்தில் வெளியிட விட மாட்டோம் என்று கன்னட வெறியர்கள் அறிவித்ததும் இதையடுத்து சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததும் சமீபத்திய நிகழ்வுகள்.

அதே நேரம், “முன்பு அரசியலுக்கு வருவதாக சும்மா அறிவித்துக்கொண்டிருந்தார் ரஜினி. ஆனால் இப்போது அரசியல் கட்சி துவங்கப்போவதாக உறுதியாக அறிவித்துள்ளார். ஆகவே  இப்போது முன்பு போல மன்னிப்பு கேட்க மாட்டார்” என்று அவரது ரசிகர் மன்ற தரப்பில் கூறப்படுகிறது.

வாட்டாள் நாகராஜ், கமல் படங்களையும் கர்நாடகத்தில் வெளியிட விடப்போவதில்லை என்று பேசியிருக்கிறார்கள். ஆனால் அவரது விஸ்வரூபம் 2 மற்றும் சபாஷ் நாயுடு ஆகிய திரைப்படங்கள் தற்போதைக்கு வருவதாக தெரியவில்லை. ஆகவே கமல் தனது கருத்தை மாற்றிக்கொள்வாரா என்பது போகப்போகத் தெரியும்.

 

#Rajnikanth #change #idea i#cauvery