சென்னை:

சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சர்வீஸ் சாலைகள் மூடப்பட்டன.

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும்  ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.  காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் அளித்த 6 வார காலஅவகாசம் முடிவடைந்த நிலையில் மத்திய அரசு அதன்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதேபோன்று தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதற்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சியினர் தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடி போராட்டம் நடத்தினர்.  இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் 18 பேரை கைது செய்தனர்.  பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சென்னை மெரீனா கடற்கரையில் இன்று போராட்டம் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக சர்வீஸ் சாலை மூடப்பட்டது.  அங்கு வாகன போக்குவரத்துக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

போராட்டம் நடைபெறுவதை தடுக்க 300க்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.