டில்லி
பிரதமர் அறிவித்த நிவாரணத் தொகையில் மத்திய உள்துறை அமைச்சகம் 22% மட்டுமே காஷ்மீருக்கு அளித்துள்ளதாக பாராளுமன்ற நிலைக்குழு அறிவித்துள்ளது
மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாராளுமன்ற நிலைக் குழு முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் தலைமையில் இயங்கி வருகிறது. இந்தக் குழு மத்திய உள்துறை அமைச்சகம் காஷ்மீர் மாநிலம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் முடிவுகளை ஒரு அறிக்கையாக பாராளுமன்றத்தில் இந்தக் குழு அளித்துள்ளது.
அந்த ஆய்வறிக்கையில், “காஷ்மீர் மாநில முன்னேற்றத்துக்காக பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 80.068 கோடி அளிக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மாநிலம் அளித்த திட்டங்களில் ரூ. 67046 க்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இதில் ரூ. 17913 கோடி மட்டுமே இதுவரை அளித்துள்ளது. இதனால் கடந்த ஒரு வருடத்தில் இந்த திட்டங்களில் எந்த ஒரு முன்னேற்றமும் தென்படவில்லை.
ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களில் வீடிழந்தோர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேற்றப் பட்ட 36384 குடும்பத்தினருக்கான நிதி உதவிகள், புதிய வேலை வாய்ப்பு உருவாக்குதல், எல்லையில் ராணுவத்தினரை அதிகரித்தல் மற்றும் சுற்றுலாவை முன்னேற்றுதல் உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளன. தற்போது நிதி பற்றாக்குறையினால் பல திட்டங்கள் இன்னும் ஆரம்பிக்கப் படாமலே உள்ளன.
பிரதமர் அலுவலகம் ஒதுக்கீடு செய்த ரூ,80068 கோடிக்கான திட்டங்கள் முழுமையாக தீட்ட்ப்பட வேண்டும். அத்துடன் இந்த திட்டங்களுக்கான முழுத் தொகையும் உடனடியாக வழங்கப்பட வேண்டும். இந்த திட்டங்களுக்கு செலவிடப் படும் செலவினங்கள் குறித்து கண்காணிப்பு வேண்டும் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உடனடியாக முழுத் தொகையும் அளிக்கப்பட வேண்டும்” என குறிப்பிடப் பட்டுள்ளது.