மும்பை
செபி என அழைக்கப்படும் பங்குச் சந்தை கட்டுப்பாடுக் குழுமம் சிறிய முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக பல புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.
பங்குச் சந்தையில் சிறிய அளவில் முதலீடு செய்வோரிடம் இருந்து தங்களின் பங்குகளை திரும்ப வாங்க பல நிறுவனங்கள் விதிமுறைகள் வைத்துள்ளன. அவற்றை ஆராய்ந்து திருத்தம் செய்யுமாறு சிறிய முதலீட்டாளர்கள் செபிக்கு கோரிக்கை விடுத்தனர். அதை ஆராய்ந்த செபி தற்போது சில திருத்தங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, “பங்குகளை திரும்ப வாங்க நினைக்கும் நிறுவனங்கள் தங்களின் முதலீட்டில் 25% வரை மதிப்பில் உள்ள பங்குகளை மட்டுமே பங்குதாரர்களின் அனுமதியுடன் திரும்ப வாங்க இயலும். அதே நேரத்தில் 10% வரையிலான பங்குகளை பங்குதாரர்களின் அனுமதி இன்றி திரும்ப வாங்கலாம். அத்துடன் பங்குகளை திரும்பப் வாங்கும்ம் போது சிறிய முதலீட்டாளர்களுக்கு 15% வரை முன்னுரிமை அளிக்க வேண்டும்.
தனது பங்குகளை மதிப்பு குறைப்பதற்காக எந்த நிறுவனமும் திரும்ப வாங்கக் கூடாது. அத்துடன் இயக்குனர் குழுக் கூட்டத்தில் முடிவெடுத்து ஒரு வருடத்துக்குள் நிறுவனங்கள் பங்குகளை திரும்ப வாங்கி விட வேண்டும். மேலும் விலைப்புள்ளி ஒப்பந்தம் அளிக்கப்பட்டு பங்குதார்களிடம் அவர்களின் பங்குகளுக்கான விலைபுள்ளிகளைப் பெற வேண்டும். இது குறித்து பங்குதாரர்கள் தங்களின் கருத்துக்களை ஏப்ரல் 15ஆம் தேதி வரை அளிக்கலாம்” என தெரிவித்துள்ளது.