டில்லி:

கவல் திருட்டு தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் வரும் ஏப்ரல் 7-ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என மத்திய அரசு கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது.

பேஸ்புக் தகவல் திருட்டு காரணமாக கேம்பிரிட்ஜ் அனாலிடிகா (Cambridge Analytica), நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், பேஸ்புக் நிறுவனத்துக்கும் கெடு விதித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றிக்கு, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம், பேஸ்புக்கில் இருந்த தகவல்களை திருடி,  உதவி செய்ததாக சமீபத்தில் பிரிட்டனின் சேனல் 4 கடந்த மார்ச் 19-ம் தேதி அன்று செய்தி வெளியிட்டது.

அதில், பேஸ்புக்கில்  இருந்து  50 மில்லியன் வாக்காளர்களின் தகவல்களைத் திருடி, டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற உதவி செய்ததாக கூறியது.

இந்த செய்தியால் உலக முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பல சிக்கல்கள் உருவாகின.

இதன் காரணமாக,  தகவல் திருட்டு நடந்ததை ஒப்புக் கொண்ட பேஸ்புக் அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டதோடு, இனி மேல் இது போன்ற நிகழ்வு இருக்காது என்றும் உறுதியளித்தது.

இந்நிலையில், கேம்பிரிட்ஜ் அனால்டிகா  நிறுவனத்துடன் இந்திய அரசியல் கட்சிகளும் தொடர்பு வைத்துள்ளதாக வும்  கூறப்பட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கும் இந்த அமைப்பு உதவி செய்திருக்கூடும் என நம்பப்படுகிறது.

இந்நிலையில பேஸ்புக் தகவல் திருட்டு தொடர்பாக  வரும் ஏப்ரல் 7-ம் தேதிக்குள் விளக்கமளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல் 7-ம் தேதிக்குள் பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து திருப்தி அளிக்கும் வகையிலான விளக்கம் வரவில்லை எனில் பேஸ்புக்கை இந்தியாவில் தடைசெய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.