டில்லி:

‘கூகுள் ஸ்ட்ரீட் வியூ’ என்ற செயலியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள நகரங்கள், சுற்றுலா தளங்கள், ஆறுகள் போன்றவற்றின் புகைப்படங்களை 360 டிகிரியில் பார்க்கும் வகையிலும், தெருக்களில் நிலை குறித்த புகைப்படங்களையும் இதில் காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய தெருக்களை 3டி என்ற முப்பரிமான வடிவில் பார்க்க முடியும். உலகளவில் இந்த திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு அனுமதி கோரி கூகுள் நிறுவனம் இந்திய அரசிடம் விண்ணப்பம் செய்திருந்தது. இந்த செயலி வெள்ளோட்டமாக பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் தாஜ்மகால், செங்கோட்டை, குதுப் மினார். வாரனாசி ஆற்றங்கரை, நலந்தா பல்கலைக்கழகம், மைசூர் அரண்மனை, தஞ்சை பெரிய கோயில், சின்னசாமி விளையாட்டரங்கம் ஆகிய பகுதிகளில் தொல்லியல் துறை பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டது.

கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் எர்த் ஆகியவற்றின் தொழில்நுட்பத்துடன் கூகுள் ஸ்ட்ரீட் வியூ செயலியும் செயல்பட்டது. அமெரிக்கா, கனடா, இந்தியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலும் 2007ம் ஆண்டு முதல் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை இது செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்க மறுத்துள்ளது. மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் லோக்சபாவில் அளித்த எழுத்துப்பூர் பதிலில்,‘‘கூகுள் ஸ்ட்ரீட் வியூ தொடர்பாக அனுமதி கோரி அந்நிறுவனம் விண்ணப்பம் அளித்திருந்தது. இதன் மூலம் உலகளவில் தெருக்கள், பொது இடங்களை 360 டிகிரி கோணத்தில் வெளிப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை மத்திய அரசு ஏற்கவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.