மதுரா டிராவல்ஸ் நிறுவனம் சார்பில் நடைபெற்ற சிறந்த சுற்றுலா அமைப்புகளுக்கான விருது வழங்கும் விழா கடந்த 14ம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் காலை முதல் மாலை வரை பிரம்மாண்டமாக நடந்தேறியது.
சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் போக்குவரத்து நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், சுற்றுலா அமைப்பினர் ஆகிய 100 நிறுவனங்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டன.நிகழ்ச்சிக்கு மதுரா டிராவல்ஸ் நிறுவனத் தலைவர் வி.கே.டி.பாலன் தலைமை வகித்தார்.
பின்னணிப் பாடகி பி.சுசீலா, விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோஷம், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், பத்மஸ்ரீ விருது பெற்ற யோகா பயிற்சியாளர் ஞானாம்பாள், இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி, மத்திய சுற்றுலாத் துறையின் தென்பிராந்திய இயக்குநர் ஸ்ரீவத் சஞ்சய் வஸ்தவா உள்ளிட்டோர் விருதுகளை கலந்துகொண்டு விருதுகளை அளித்தனர்.
நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், “சுற்றுலா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. அது ஒரு பகுதி மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறை, காலநிலை ஆகியவற்றை அறிந்து கொள்ள உதவுகிறது. உலகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களை இணைப்பதிலும் புதிய உறவுகளை வளர்ப்பதிலும் சுற்றுலா முக்கியப் பங்கு வகிக்கிறது” என்றார்.
மேலும், “கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) போன்ற நவீன தொழில்நுட்பத்தால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. அதே நேரம் ஒன்றுகூடி கலைந்துரையாடுவது குறைந்து கொண்டே வருகிறது. இதை இன்றைய இளைஞர்கள் புரிந்து கொண்டு உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்று பேசினார்.
நிகழ்வில் யோகாவுக்கான சிறந்த தலத்துக்கான விருது கோவை ஈஷா யோகா மையத்துக்கு அளிக்கப்பட்டது. இந்த விருதை ஈஷா யோகா மையத்தின் தன்னார்வலரும், டி.ஐ.நிறுவனத்தின் மேலாண் இயக்குநருமான வெள்ளையன் சுப்பையாவிடம் இந்தியாவுக்கான இலங்கை துணைத்தூதர் கிஷ்ணமூர்த்தி அளித்தார்.