பெங்களூரு

ஷ்வந்த்பூர் – ஓசூர் இடையில் உபயோகமின்றி உள்ள பாதையை உபயோகிக்காமல் புதிய பாதை அமைக்க உள்ள ரெயில்வேக்கு பயணிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தென் மேற்கு ரெயில்வேயின் பெங்களூரு பிரிவு சமீபத்தில் ஓசூரில் இருந்து பானஸ்வாடிக்கு புதிய ரெயில்கள் விடப்படும் என அறிவித்தது.    இந்த திட்டத்துக்காக ரூ.. 350 கோடி ஒதுக்கி உள்ளது.  அத்துடன் இந்தப் பாதை இடையில் புதிய பாலப் பாதை அமைக்க ரூ.2000 கோடி செலவாகும் என மதிப்பீடு ஒன்று அளிக்கப் பட்டுள்ளது.    இந்த தடத்தில் ஏற்கனவே 4 ரெயில்கள் ஓடிக் கொண்டு இருக்கின்றன.

இந்த திட்டங்களுக்கு பெங்களூரு வாசிகள் இடையே வரவேற்பு உண்டாகி உள்ள சமயத்தில் பெங்களுருவை முன்னேற்றும் நகரவாசிகள் என்னும் அமைப்பு மற்றொரு யோசனையை தெரிவித்துள்ளது.   இந்த தடத்தில் ஏற்கனவே கடந்த 1922 ஆம் வருடம் அமைக்கப்பட்டு இன்று வரை உபயோகிக்காமல் உள்ள ரெயில்வே தடத்தை இந்த திட்டத்துக்கு உபயோகிக்கலாம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பின் உறுப்பினரான மனிஷ் சமீபத்தில் ரெயில் பயணிகளின் கருத்தைக் கேட்டு ஒரு கணிப்பு நிகழ்த்தி உள்ளார்.    அவர், “பல வருடங்களாக உபயோகப்படுத்த படாமல் உள்ள இந்த தடத்தை உபயோகிப்பது மூலம் சுமார் 180 கிமீ புதிய தடம் அமைப்பதையும் 45 ரெயில் நிலைய விரிவாக்கம் மற்றும் புதிய நிலையங்கள் அமைப்பதையும் தவிர்க்க முடியும்.   இந்த ஆலோசனைக்கு ஆதரவாக சுமார் 500 பயணிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

ஏற்கனவே அமைக்கப்பட்டு உபயோகிக்காமல் உள்ள இந்த ரெயில்வே தடத்தை உபயோகிப்பதன் மூலம் பெங்களூரு மெட்ரோ தொடங்கும் பையனப்பள்ளி என்னும் இடத்துக்கு இந்த தடத்தை இணைக்க முடியும்.   இந்த தடம் செயல்படுத்தப்பட்டால் புதிய தடம் அமைக்கும் நேரமும் பணச் செலவும் மிச்சமாகும்.    ரெயில்வே தனது தேவையற்ற வெட்டிச் செலவை குறைக்க முடியும். “  என தெரிவித்துள்ளார்.