டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்த நாஞ்சில் சம்பத் ம.தி.மு.க.வில் இணையப்போதவதாக சமூகவலைதளங்களில் பரவி வரும் தகவலுக்கு நாஞ்சில் சம்பத் நமது பத்திரிகை டாட் காம் இதழுக்கு பிரத்யேகமாக பதில் அளித்தார்.
தி.மு.க.வில் முக்கிய பிரமுகராக வலம் வந்த நாஞ்சில் சம்பத், ம.தி.மு.க. துவங்கப்பட்டபோது அக்கட்சியில் இணைந்தார். அக்கட்சியின் துணைப்பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்தார்.
அவரது ஆளுமையான பேச்சு, அந்த இயக்கத்துக்கு பலமாக விளங்கியது. ஆனால் இடையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அக்கட்சியில் இருந்து விலகி, ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
அ.தி.மு.க.வின் கொள்கைப்பரப்புச் செயலாளர் பதவி அவருக்கு அளிக்கப்பட்டது. இடையில் அங்கு ஏற்பட்ட பிரச்சினையால் சிலகாலம் அமைதியாக இருந்தார்.
இந்த நிலையில் ஜெயலலிதா மறையவே, சசிகலா அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார். அப்போது, அரசியலைவிட்டே ஒதுங்குவதாக அறிவித்தார் நாஞ்சில்சம்பத். பிறகு சசிகலா தரப்பினர் பேசியதை அடுத்து அந்த அணியில் முக்கிய பிரமுகராக உலாவந்தார். சசிகலா சிறைக்குச் சென்ற நிலையில் டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளாக விளங்கினார்.
சமீபத்தில் டி.டி.வி. தினகரன் கட்சி துவங்கியபோது, கட்சி பெயரில் அண்ணா, திராவிடம் ஆகியவை இல்லை என்று வருந்திய நாஞ்சில் சம்பத், அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகுவதாகவும் இனி இலக்கிய மேடைகளில் மட்டும் தனது பேச்சைக் கேட்கலாம் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த நாஞ்சில் சம்பத், “தினகரன் அணியில் இருந்தபோது, 17 வழக்குகளால் பாதிக்கப்பட்டேன். அப்போது தினகரன் ஒரு ஆறுதல்கூட சொல்லவில்லை” என்று ஆதங்கத்துடன் கூறினார்.
மேலும், “ம.தி.மு.க.வில் இருந்தபோது, வைகோ இதுபோன்ற நேரங்களில் “எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் சம்பத்” என்று ஆறுதல் சொல்வார்” என்றும் குறிப்பிட்டார். .
இதையடுத்து மதிமுக பிரமுகர்கள் மேலும் சில சம்பவங்களை தெரிவித்தனர். அதாவது, “வழக்கு ஒன்றிற்காக மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நாஞ்சில் சம்பத், அங்கு குண்டர்களால் தாக்கப்பட்டார். அப்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடனே நீதிமன்றம் மூலம் வேறு சிறைக்கு மாற்ற ஏற்பாடு செய்தார் . சிறை மாறுதலின் போது காவல்துறை வாகனத்தை பின்தொடர்ந்து நூறு தொண்டர்படை தோழர்களை பாதுகாப்புக்காக அனுப்பிவைத்தார் .
அதே போல நாஞ்சில் சம்பத் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்த போது, வைகோவே நீதிமன்றத்தில் வாதாடினார்.
தி.மு.க. ஆட்சியின் போது நாஞ்சில் சம்பத் வீடு இடிக்கப்பட்டபோது வைகோதான் வீடு கட்டித்தந்தார். ஆகவே நாஞ்சில் சம்பத் மீண்டும் ம.தி.மு.க.வுக்கு வருவார்” என்று பேச ஆரம்பித்தனர்.
இந்த நிலையில், நேற்று மாமல்லபுரத்தில் நடந்த இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பஷூர்அகமதின் மகன் திருமணம் நடந்தது. இதில் வைகோ உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். வைகோ மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது நாஞ்சில் சம்பத் மண்டபத்துக்கு வந்தார். மேடையின் கீழ் அமர்ந்திருந்த ம.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யாவின் பக்கத்து இருக்கையில் அவர் அமர்ந்தார். சத்யாவுடன் நீண்ட நேரம் நாஞ்சில் சம்பத் பேசிக்கொண்டிருந்தார்.
இதுவும், “நாஞ்சில் சம்பத் தனது அரசியல் துறவற முடிவை கைவிட்டு ம.தி.மு.க.வில் இணைவார்” என்ற யூகத்துக்கு வலு சேர்ப்பதாக இருந்தது.
இதையடுத்து சமூகவலைதளங்களில், “மீண்டும் நாஞ்சில் சம்பத், ம.தி.மு.க.வில் இணைகிறார்” என்று பலரும் பதவிட்டுவருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் பத்திரிகை டாட் காம் இதழின் சார்பாக, நாஞ்சில் சம்பத்தை தொடர்புகொண்டு இது குறித்து கேட்டோம்.
அவர், நிறுத்தி நிதானமாக, “இது தவறான தகவல். அரசியலைவிட்டு விலகுவது என்று நான் எடுத்திருக்கிற முடிவை சீர்குலப்பதற்காக சிலர் செய்யும் முயற்சியே இந்த வதந்தி. என்னைப் பொறதுத்தவரை, மீண்டும் ம.தி.மு.க.வில் என்றில்லை.. எந்தவொரு கட்சியிலும் சேரப்போவதில்லை. அப்படியொரு எண்ணம் என்னுடைய நெஞ்சில் கடுகளவும் கிடையாது. அரசியலைவிட்டு விலகுவது என்கிற என் முடிவு தீர்மானமானது” என்று உறுதியான குரலில் தெரிவித்தார் நாஞ்சில் சம்பத் .