சென்னை
ரஜினிகாந்தை புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ சி சண்முகம் நேற்று திடீரென சந்தித்து 40 நிமிடம் பேசி உள்ளார்.
ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த பின் முதல் நிகழ்ச்சியாக சென்னையில் உள்ள ஏ சி எஸ் மருத்துவக் கல்லூரியில் நடந்த எம் ஜி ஆர் சிலை திறப்பு விழாவில் கலந்துக் கொண்டார். கடந்த 5 ஆம் தேதி நடந்த இந்த விழாவில், “தமிழ்நாட்டில் ஒரு வெற்றிடம் உண்டாகி உள்ளது. அதை நான் நிரப்புவேன். எம் ஜி ஆரின் ஆட்சியை நான் தர உள்ளேன்” என பேசினார்.
நேற்று அந்த மருத்துவக் கல்லூரி உரிமையாளரும், புதிய நீதிக்கட்சி தலைவருமான ஏ சி சண்முகம் நடிகர் ரஜினிகாந்த் இல்லத்துக்கு வந்து அவரை சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 4 நிமிடங்கள் நடைபெற்றது. இருவரும் இந்த சந்திப்பின் போது அரசியல் உள்ளிட்ட பலவற்றை பற்றி தீவிரமாக ஆலோசனை நடத்தியதாக சொல்லப் படுகிறது.
ஏ சி எஸ் மருத்துவக்கல்லூரி நிர்வாகம், “எங்கள் கல்லூரி வளாகத்தில் நடந்த எம் ஜி ஆர் சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ரஜினிகாந்த் உரையாற்றியது எங்கள் நிர்வாகத்துக்கும் மாணவர்களுக்கும் மகிழ்வை அளித்தது. அதற்காக நன்றி தெரிவிக்க ஏ சி சண்முகம் ரஜினிகாந்தை சந்தித்தார். அப்போது அரசியல் குறித்து பேசினாரா என்பது எங்களுக்கு தெரியாது” எனக் கூறி உள்ளது.