சென்னை:
எடப்பாடி தலைமையிலான அரசு ஓராண்டு நிறைவு பெற்றதை தொடர்ந்த நடைபெற்ற விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ், கமல், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார்.
மக்களை பற்றி சித்திக்காதவர்கள் சிஸ்டம் பற்றி பேசுவதா என கண்டனம் தெரிவித்தார்.
ஜெ.மறைவுக்கு பிறகு எடப்பாடி தலைமையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பதவி ஏற்று ஓராண்டு முடிவடைந்துள்ள நிலையில், ஓராண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
விழாவில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், நடிகர்கள் கமல், ரஜினியின் அரசியல் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.
முதல்வர் பழனிசாமிக்கு உறுதுணையாக இருப்போம் என்று கூறிய ஓபிஎஸ், புதிதுபுதிதாக பலர் அரசியலுக்கு வருகிறார்கள் என்ற அவர் மக்களை பற்றி சிந்திக்காதவர்கள், அவர்களின் கஷ்டம் குறித்து அறியாதவர்கள் சிஸ்டத்தை பற்றி சிந்திக்கிறார்கள் என்று கூறி ரஜினியை சாடினார். அரசியல் பற்றி தெரியாதவர்களுக்கு பூஜ்ஜியம்தான் கிடைக்கும் என்று ரஜினி குறித்து ஓபிஎஸ் மறைமுகமாக விமர்சனம் செய்தார்.
அதுபோல சிலர் கருத்துகந்தசாமியாக இருப்பதாகவும் கமல் குறித்து பேசினார்.
மேலும் எங்களுக்கு குழிபறிக்க நினைப்பவர்களை நாங்கள் விடமாட்டோம் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக அரசின் ஓராண்டு சாதனையில் மக்களுக்கும், விசுவாசத் தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. ஆனால் நம்மை எதிர்ப்பவர்களுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி என்றார்.
எதிர்க்கட்சியினர் நமக்கு எதிராக தொடுத்த அத்தனை அஸ்திரங்களையும், தர்மத்தின் வழியிலே, சத்தியத்தின் வழியிலே தகர்த்தெறிந்தோம். எதிர்கட்சியினர் என்ன விமர்சனம் செய்தாலும், நாங்கள் கவலைப்படவும் இல்லை, கலங்கவும் இல்லை, பயமும் இல்லை. கவலைப்படுவதும், கலங்கி நிற்பதும் எதிர்கட்சியினர் தான் என ஓபிஎஸ் கூறினார்.
ஜெயலலிதாவுக்கு பிறகு இந்த ஆட்சி நிலைக்காது, நீடிக்காது என்று பரபரப்பாக பேசியவர்களும், அடுக்கடுக்காக அறிக்கைகள் விட்டவர்களும், ஆரூடம் கூறியவர்களும், ஆடி அடங்கிப்போய்விட்டார்கள். அவர்கள் சொன்ன அத்தனையும் பொய்யாக்கி ஜெயலலிதாவின் ஆட்சியை மட்டுமே உண்மையாக்கி நாம் வெற்றி பெற்றி ருக்கிறோம்.
இவ்வாறு ஓபிஎஸ் பேசினார்..
அதைத்தொடர்ந்து, செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு வாழ்த்திப் பேசினார். தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்புரை ஆற்றினார். செய்தித் துறை செயலர் ஆர்.வெங்கடேசன் நன்றி தெரிவித்தார்.
அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், நத்தம் விஸ்வநாதன், பொன்னையன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், துறை செயலர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
விழா முடிவில், அரசு சாதனைகள் அடங்கிய குறும்படங்கள் திரையிடப்பட்டன.
நடிகர் ரஜினி, கடந்த ஆண்டு தனது ரசிகர்களுடனான சந்திப்பின்போது, தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை அதன் காரணமாக அரசியலுக்கு வருவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.