தேனி
சென்னை டி ஜி பி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இரு காவலர்கள் சொல்வது தவறான தகவல் என தேனி காவல்துறை சுப்பிரண்ட் பாஸ்கரன் கூறி உள்ளார்.
சென்னை டிஜிபி அலுவலகத்தில் இன்று தேனி மாவட்டத்தை சேர்ந்த இரு ஆயுதப்படை காவலர்கள் திக்குளிக்க முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் தீக்குளிக்க முயன்றவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது தங்களை காரணமின்றி ராமநாதபுரம் மாவட்டத்துகு இட மாற்றம் செய்ததாகாவும், ஜாதி ரீதியாக தங்களை உயர் அதிகாரி பழி வாங்குவதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து தேனி மாவட்ட காவல்துறை சூப்பிரண்ட் பாஸ்கரன், “காவலர்கள் கூறுவதை நான் மறுக்கிறேன் காவலர் ரகு மீது சிறைக்கைதிகளிடம் கஞ்சா சிக்கியது தொடர்பாக சிறைக் கண்காளிப்பாளர் புகார் அளித்திருந்தார். அதை ஒட்டி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கணேஷ் தனது பணிக்கு முறையாக செல்லவில்லை. அந்நேரத்தில் சீருடை அணிந்தவாறு ரேக்ளா பந்தயத்தில் கலந்துக் கொண்டார். அது மட்டுமின்றி காவல்துறைக்கு எதிராக அவர்கள் சுவரொட்டிகள் ஒட்டி இருந்தனர். இது போல பல ஒழுங்கின செயல்களில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.
காவல்துறை உத்தரவை மதிக்காமல் பல முறை நடந்துக் கொண்டுள்ளனர். அதனால் துணை கண்காளிப்பாளர் அளித்த பரிந்துரையின் பேரில் அவர்கள் ராமநாதபுரத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த இட மாற்றம் ரகு, கணேஷ் உள்ளிட்ட நான்கு பேருக்கு அளிக்கப்பட்டுளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஜாதியை சேர்ந்தவர்கள். எனவே இது ஜாதி ரீதியான நடவடிக்கை என்பது தவறு.
அனைத்து ஜாதி மற்றும் மதத்தினர் உள்ள காவல்துறையில் ஜாதியின் காரணமாக நடவடிக்கை என்பதை யாராலும் எற்றுக் கொள்ள முடியாது” என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.