டில்லி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என ஆந்திர மாநில எம்.பி.க்களும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் பாராளுமன்ற நடவடிக்கை இன்று 13வது நாளாக முடக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2–வது கட்ட அமர்வு கடந்த 5–ந் தேதி தொடங்கியது. அன்று முதல், பிஎன்பி மோசடி, காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்ததஸ்து போன்ற காரணங்களை காட்டி,  காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க. உள்பட பல்வேறு கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக பாராளுமன்றத்தில் எந்தவித விவாதங்களும் நடைபெறாமல்  இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு  வருகின்றன.

இதற்கிடையில், தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் கட்சி சார்பில் மத்திய அரசு மீது கொடுக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து வாக்கெடுப்பு நடத்த முடியாது என்று கூறி அவையை நாள் முழுவதும் சபாநாயகர் ஒத்தி வைத்து விடுகிறார்.

இதன் காரணமாக மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானமும் 3–வது நாளாக எடுத்துக் கொள்ள முடியாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று காலை பாராளுமன்றம் கூடியதும்  இரு அவைகளிலும் அ.தி.மு.க., தி.மு.க., தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.