டில்லி:
குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், இளையராஜா, பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் உள்பட 42 பேருக்கு ஜனாதிபதி விருது அளிக்கப்பட்டது.
வருடம்தோறும் குடியரசு தினத்தையொட்டி, பத்ம விருதுகள் அளிக்கப்படுகின்றன. இந்த வருடம் 84 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த முறை, வழக்கத்துக்கு மாறாக, சாமானியர்கள் மற்றும் பிரபலம் அல்லாதவர்களும் விருது பட்டியலில் இடம் பிடித்தனர்.
இவர்களில், முதல்கட்டமாக 42 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கும் விழா, நேற்று குடியரசுத்தலைவர் மாளிகையின் தர்பார் மண்டபத்தில் நடைபெற்றது. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை அளித்தார்.
மூவருக்கு பத்ம விபூஷண், நால்வருக்கு பத்ம பூஷண், 36 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது அளிக்கப்பட்டது. அப்போது, அரங்கத்தில் அனைவரும் கரகோஷம் எழுப்பினர். பேட் மிண்டன் வீரர் கே.ஸ்ரீகாந்த், கேரளாவில் பாம்புக்கடிக்கு வைத்தியம் பார்க்கும் லட்சுமி குட்டி, பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முரளிகாந்த் ராஜாராம் பட்கர் ஆகியோர் விருது பெறும்போதும் கரவொலியால் அரங்கம் அதிர்ந்தது.
இந்துஸ்தானி பாடகர் உஸ்தாத் குலாம் முஸ்தபா கான், கேரளாவைச் சேர்ந்த வலதுசாரி சிந்தனையாளர் பி.பரமேஸ்வரன் ஆகியோரும் பத்ம விபூஷண் விருது பெற்றனர். தமிழ்நாட்டை சேர்ந்த தொல்லியல் அறிஞர் நாகசாமிக்கு பத்ம பூஷண் விருது அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டை சேர்ந்த நானாம்மாளுக்கு பத்மஸ்ரீ அளிக்கப்பட்டது.
விருது பெற்ற சிலர், சக்கர நாற்காலியில் வந்தனர். அவர்களுக்கு கீழே இறங்கிச் சென்று ஜனாதிபதி விருது அளித்தார். மறைந்த இருவருக்கு விருது அளிக்கப்பட்டது. ஒருவர் விருது பெற வரவில்லை.
இந்த நிகழ்ச்சியில், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய மந்திரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மீதி 42 பேருக்கு பத்ம விருதுகள் அளிக்கும் விழா, ஏப்ரல் 2–ம் தேதி நடைபெற இருக்கிறது.