சென்னை:
இந்தியா மதசார்பற்ற நாடு, இங்கு அனைத்து மதத்தினரும் யாத்திரை, ஊர்வலம் செல்லலாம் என்றும், தமிழகத்தில் மட்டும் ஏன் தடை கோருகிறார்கள் என தெரியவில்லை என அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது உள்பட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அயோத்தி முதல் 6 மாநிலங்களின் வழியாக ராமராஜ்ஜிய ரத யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 13ந்தேதி அயோத்தியில் தொடங்கிய ரத யாத்திரை, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகா, கேரளம் வழியாக நாளை காலை திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வழியே இந்த ரத யாத்திரை இன்று தமிழகம் வந்துள்ளது.
தமிழகத்தில் ரத யாத்திரைக்கு திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய ஜனநாயகக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதன் காரணமாக ரத யாத்திரை வரும் நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளத.
இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார்,
தமிழகம் பெரியார் மண் என்றும், அண்ணா வாழ்ந்த மண் என்றும், அமைதியாக உள்ள தமிழகத்தில் தேவையில்லாத பிரச்சினைகைளை எதிர்க்கட்சி தலைவர்கள் உருவாக்கி வருகின்றனர் என்றார்.
இந்த ரத யாத்திரையை மற்ற மாநிலங்கள் எதிர்க்காதபோது தமிழகத்தில் மட்டும் ஏன் எதிர்க்கின்றனர், தடை கோருகிறார்கள் என ஜெயக்குமார் கேள்வி எழுப்பிய அமைச்சர், இந்தியா மதசார்பற்ற நாடு. மதச்சார்பற்ற நாட்டில் அனைவருக்கும் யாத்திரை செல்ல உரிமையுள்ளது.
மதசார்பற்ற நாட்டில் அனைத்து மதத்தினரும் ஊர்வலம் செல்லலாம். தமிழகத்தில் மட்டும் ஏன் தடை கோருகிறார்கள். இந்த பேரணிக்கும், ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பிற்கும் தொடர்பில்லை. ரத யாத்திரை, கேரளா, மஹாராஷ்டிரா, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சென்ற போது ஏன் கேட்கவில்லை.
மக்கள் தெளிவாக உள்ளார்கள். ரத யாத்திரை காரணமாக காரணமாக யாரும் மதம் மாறிவிட மாட்டார்கள். யாரை ஆதரிக்க வேண்டும், நிராகரிக்க வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியும் என்றார்.
சட்டம் ஒழுங்கு முன்னெச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதுபோலவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
தமிழக எதிர்கட்சிகளின் எதிர்ப்பை மீறி ரத யாத்திரை தமிழகம் வந்ததையடுத்து. தடை உத்தரவை மீறி, ரத யாத்திரையை தமிழகத்திற்குள் அனுமதிக்க கூடாது என தென்காசி அருகே செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் சிலை அருகே 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் பதற்றம் நிலவி வருகிறது.