சென்னை:
விசுவஇந்து பரிஷத்தின் ரத யாத்திரைக்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திட்டமிட்டப்படி ரத யாத்திரை தமிழகத்தற்குள் நுழைந்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே நடைபெற்ற சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து 6 மாநிலங்களைக் கடந்து ராமேஸ்வரம் வரை ராமராஜ்ய ரத யாத்திரை நடைபெறுகிறது.இந்த ரத யாத்திரையை விசுவ இந்து பரிஷத் அமைப்பு நடத்துகிறது.
கடந்த 13ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை பல்வேறு மாநிலங்களின் பகுதிகளின் வழியாக இன்று தமிழக எல்லைக்குள் வந்துள்ளது.
தென்காசி காசி விசுவநாதர் கோவில் அருகே, விசுவ இந்து பரிஷத்தின் ரதயாத்திரைக்கு வரவேற்பு அளிக்க இந்து அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.
இந்நிலையில், ரத யாத்திரையை தமிழகத்திற்குள் அனுமதி அளிக்கக்கூடாது என மு.க.ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக பல தலைவர்கள் முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் 144 போடப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், ரத யாத்திரை தமிழகததிற்குள் நுழைந்துள்ளது.
கேரளாவைக் கடந்து தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தின் கோட்டை வாசல் பகுதியில் நுழைந்துள்ளது.
நெல்லை மாவட்டம் கோட்டைவாசல் பகுதிக்குள் ரத யாத்திரை வந்துள்ளது. செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் வழியாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடைகிறது.
பின்னர் மதுரை வழியாக வரும் 25ம் தேதி ராமேஸ்வரத்தில் ரத யாத்திரை நிறைவுபெறுகிறது.
ரத யாத்திரை தமிழகத்திற்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து செங்கோட்டையில் எஸ்டிபிஐ அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவி உள்ளது.