டில்லி:

பிரதமர் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க அதிமுக மறுத்துவிட்டதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. வரபிரசாத ராவ் கூறியுள்ளார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர மறுத்தது மத்திய அரசு. இதனைக் கண்டித்து மோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர  ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்குதேசம் ஆகிய கட்சிகள் தீர்மானித்துள்ளன.

அதே நேரம் லோக்சபா, ராஜ்யசபாவில் அதிமுக எம்.பிக்கள் காவிரி விவகாரத்தை முன்வைத்து தொடர்ந்து போராடுகின்றனர். இதனால் சபை நடவடிக்கைகள் முடக்கப்படுகின்றன. இதனிடையே மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்க வேண்டும் என்று பல கட்சிகளும் வற்புறுத்துகின்றன.

ஆனால் அதிமுகவோ எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அதிமுக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்காது என அக்கட்சி எம்பிக்கள் கூறியதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்பி வரபிரசாத ராவ் கூறியிருக்கிறார். தாம் அதிமுக எம்பிக்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டதாகவும்,  அவர்கள் மறுத்துவிட்டதாகவும் வரபிரசாத ராவ் தெரிவித்துள்ளார்.