சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் சசிகலாவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி. கேசி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும் என கே.சி. பழனிச்சாமி, ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் தெரிவித்தார். இதையடுத்து அவர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக, அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் கே.சி. பழனிச்சாமி தெரிவித்துள்ளதாவது:
“என்னை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியிருப்பதன் மூலம் பாஜகவின் பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் அதிமுக இருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிந்துவிட்டது. இதுவரை பாஜகவை எதிர்த்து பேசக் கூடாது என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
துணை முதல்வர் ஓபிஎஸ் பட்ஜெட் உரையில் திராவிடம் குறித்தும் பாஜகவை எதிர்த்தும் பேசியிருந்தார். இதனடிப்படையில்தான், பாஜகவை எதிர்ப்போம் என்று தெரிவித்தேன்.
அதே நேரம், தொலைக்காட்சி விவாதங்களில் சசிகலாவை மிகக் கடுமையாக பேசக் கூடாது என சிலர் மூலம் எனக்கு சொல்லி அனுப்பினர். சசிகலாவுடன் அதிமுக தலைவர்கள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்” என்று கே.சி. பழனிச்சாமி கூறியுள்ளார்.