1962ம் வருடம் ஜூன் மாதம், “ விலைவாசி உயர்வு எதிர்ப்பு” போராட்டம் நடத்தி கைதாகி, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் சி.என். அண்ணாதுரை.
அவர் விடுதலையாகி வெளியே வந்த நேரம், இந்தியா மீது சீனா போர் தொடுத்திருந்தது. இரு நாட்டுப் படைகளும் எல்லையில் மோதிக்கொண்டிருந்தன.
அந்த நேரத்தில் வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அண்ணாதுரை கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
“டில்லிக்காரனை பிடிக்கவில்லை என்றால், “பீகிங்”காரனையா பிடிக்கும்? ஒரே பூபாகத்தில் இணைந்திருந்தும் , வட நாட்டானிடம் அளவுக்கு அதிகமான அதிகாரம் குவிந்திருப்பது பிடிக்கவில்லை. அதற்கே இப்படிப்பட்ட போராட்டங்கள் நடத்துகிறோம். இந்த நிலையில் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத, கொலை பாதகம் புரியம் சீனாக்காரன், நம் நாட்டில் நுழைய எந்த மடையன் ஒப்புக்கொள்வான்? சீனாக்காரன் எடுத்து வைத்த காலடி திருப்பி எடுக்கப்படும் வரை (பிரதமர்) நேருவின் கரத்தை வலுப்படுத்தியே தீருவோம்.
அதே சமயம் சீன படையெடுப்புக்காக, திராவிட நாடு பிரச்சினியை விட்டுத்தரமாட்டோம். தலைவலி வந்தால் தைலம் தடவ வேண்டும். அதற்காக தலையை எடுத்துவிட முடியாது. அதுபோலத்தான் திராவிட நாடு பிரச்சினையும்.
ஆகவே போர் நெருக்கடியில் நம் பிரச்சினையை தள்ளிவைத்து, எந்தவித கிளர்ச்சியிலும் ஈடுபடாமல் நாடு காக்கும் பணி நமதென்றே இருப்போம்” என்றார் அண்ணாதுரை.
(அருணன் எழுதிய, “அண்ணா ஆட்சியைப் பிடித்த்து எப்படி?” என்ற நூலில் இருந்து..)