சென்னை:
பிரபல பேச்சாளரும் தினகரனின் தீவிர ஆதரவாளராக விளங்கியவருமான நாஞ்சில் சம்பத், அரசிலைவிட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
நீண்டகாலம் தி.மு.க.வில் இருந்த நாஞ்சில் சம்பத், வைகோ தலைமையில் ம.தி.மு.க. உருவானதும் அதில் இணைந்தார். துணைப் பொதுச்செயலாளராக பதவி வகித்தார். இந்த நிலையில் ஜெயல்லிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். அப்போது அவருக்கு இன்னோவா காரை பரிசளித்தார் ஜெயலலிதா. இதனால், இன்னோவா சம்பத் என்று இணையவாசிகளால் கிண்டலடிக்கப்பட்டார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முன்னதாக அவர் அளித்த இன்னோவா காரை கட்ச தலைமையகத்தில் ஒப்படைத்தார். அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அவரை சசிகலா – தினகரன் அணியினர் அழைத்தர். இதையடுத்து சசிகலா அணியில் செயல்பட்டார். சசிகலா சிறைக்குச் சென்ற நிலையில் தீவிர தினகரன் ஆதரவாளராக விளங்கினார்.
நாஞ்சில் சம்பத்துக்கு பல்வேறு உதவிகளை தினகரன் செய்தார். குறிப்பாக, நாஞ்சில் மகனின் மருத்துவக்கல்லூரி படிப்புச் செலவை தினகரன் ஏற்றதாக சொல்லப்படுகிறது.
தினகரனை, ‘திராவிட இயக்கத்தை மீட்க வந்த மீட்பர்’ என்றெலாம் பேசி வந்தார்.
இந்த நிலையில் தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் சமீபத்தில் கட்சியைத் துவங்கினார்.
கட்சிப் பெயரில் அண்ணா மற்றும் திராவிட என்பவை இருக்க வேண்டும் என்று நாஞ்சில் சம்பத் கூறியதை தினகரன் ஏற்கவில்லை.
கட்சி பெயர் அறிவிக்கப்பட்ட மேலூர் கூட்டத்துக்கும் நாஞ்சில் சம்பத் வரவில்லை.
இந்த நிலையில் தினகரன் அணியில் இருந்து விலகுவதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
மேலும், “திராவிடமும் அண்ணாவும் இல்லாத இடத்தில் என்னால் செயல்பட முடியாது. ஆகவே அரசியலில் இருந்து விலகுகிறேன். இனி இலக்கிய கூட்டத்தில் மட்டும் பேசுவேன்” என்று அறிவித்துள்ளார்.