டில்லி:
சிவசேனா, தெலுங்கு தேசத்தை தொடர்ந்து பாஜக.வுக்கு மற்றொரு கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி மிரட்டல் விடுத்துள்ளது. பாஜக.வின் பெரிய அண்ணன் தோரணையிலான செயல்பாட்டை அக்கட்சி கண்டித்துள்ளது.
இது குறித்து லோக் ஜன சக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராஜ் பஸ்வான் எம்.பி. நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கூட்டணி கட்சிகளில் கோரிக்கைகளுக்கு பாஜக செவி சாய்க்க வேண்டும். கூட்டணி கட்சிகள் வருத்தத்தில் உள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு நம்பிக்கையை ஏற்டுத்தவில்லை என்றால் பாஜக.வுக்கு 2019ம் ஆண்டு தேர்தல் பயணம் சிக்கலாக அமைந்துவிடும்.
கூட்டணி கட்சிகளின் பிரச்னைகளை பாஜக தீர்க்க முயற்சிக்க வேண்டும். பீகாரில் மஞ்கி தனது சொந்த பாதையில் பயணம் செய்கிறார். ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி தலைவர் உபேந்திரா குஷ்வாகாவும் மகிழ்ச்சியாக இல்லை. இது நல்ல விஷயங்கள் கிடையாது’’ என்றார்.
மேலும், அவர் கூறுகையில், ‘‘ உ.பி. இடைத்தேர்தல் தோல்வி மற்றும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் போன்றவை பாஜக.வுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிக்கு வந்த பின்னர் தனது சொந்த தொகுதிகளை கூட தக்கவைத்துக் கொள்ள முடியாத நிலை பாஜக.வுக்கு ஏற்பட்டுள்ளது.
இது 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலை பற்றிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் தோல்வியை பற்றி பாஜக கவலை கொள்ள வேண்டியதில்லை. எனினும் பாஜக தேர்தல் தந்திரத்தை மாற்றி அமைக்க வேண்டிய நேரம் வந்துள்ளது’’ என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் வெளியேறிய பின்னர், சிராக் இந்த எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்துள்ளார். அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பிரச்னைகள் குறித்தும், இடைத்தேர்தல் தோல்வி மூலம் பாஜக கற்க வேண்டிய பாடங்கள் குறித்தும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தெலுங்கு தேசம் கையெழுத்து இயக்கம் நடத்தி ஆதரவு திரட்டியது. ஏற்கனவே ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததற்கு பதிலடியாக தெலுங்கு தேசம் இச்செயலில் ஈடுபட்டது.