டில்லி
வரப்போகும் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒரே அணி அமைக்க சரத்பவாருடன் ராகுல் காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.
தற்போது உ.பி, மற்றும் பீகாரில் நடைபெற்ற மூன்று தொகுதிகளின் இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. அதையொட்டி எதிர்க்கட்சிகள் இணைய வேண்டியது அவசியம் என பலரும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது டில்லி இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் வந்து சில மணி நேரத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது வரவுள்ள பாராளுமன்ற தேர்தலின் போது பாஜகவுக்கு எதிரணியாக அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைப்பது குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சந்திப்புக்கு முதல் நாள் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி 20 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு விருந்து அளித்துள்ளார்.
ராகுல் காந்தி விரைவில் இது குறித்து மேற்கு வங்க முதல்வரும் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்திக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. மேலும் இம்மாதம் 28ஆம் தேதி அன்று சரத்பவார் நடத்த உள்ள கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்குகொள்ள முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.