டில்லி

.பி. இடைத்தேர்தல் முடிவுகள் வரும் வருடம் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நடந்து முடிந்த மூன்று பாராளுமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் மூன்று தொகுதிகளிலும் மத்தியில் ஆளும் பாஜக தோல்வி அடைந்தது.   பீகாரின் அராரியா தொகுதி தோல்வியை விட உ.பி மாநில இரு தொகுதிகளின் தோல்வி பாஜகவுக்கு பெரும் அடி என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.   வரும் 2019ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இந்த முடிவுகளால் பாதிப்பு உண்டாகுமா என அரசியல் பிமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உ.பி மாநில பிஜ்னோர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பார்தேந்திர சிங் :

கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலிலும், 2017ஆம் வருட சட்டமன்ற தேர்தலில் உத்திரப் பிரதேச மாநிலத்தில்  பிரம்மாண்டமான வெற்றியை அடைந்தது.    அதற்கு முழுக்க முழுக்க பாஜக தொண்டர்களின் உழைப்பே காரணமாகும்.    இந்த வெற்றியினால் கட்சிக்கு நல்ல முன்னேற்றம் கிடைத்த போதிலும் தொண்டர்களுக்கு வெற்றியின் பயன் முழுவதுமாக கிடைக்கவில்லை என சொல்ல வேண்டி உள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் நேரடியாக போட்டியிடாமல் இருக்கும் என ஒரு தவறான நம்பிக்கையில்  பாஜக இருந்து வந்ததும் இந்த தோல்விக்கு ஒரு காரணம் ஆகும்.    இந்த முறை சமாஜ்வாதி கட்சிக்கு தனது ஆதரவை கொடுத்ததால் பாஜகவுக்கு பாதிப்பு உண்டாகும் என்பதை கட்சி சரியாக கணிக்கவில்லை.  ஆனால் இந்த தோல்வி கட்சிக்கு ஒரு பாடமாக அமையும்.   இந்த தோல்வி வரப்போகும் தேர்தலில் பாஜகவுக்கு பாதிப்பை உண்டாக்காது

மும்பை வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் சஞ்சய் நிருபம் :

நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் அதுவும் குறிப்பாக உத்திரப் பிரதேச மாநில முடிவுகள் அனைத்து எதிர்கட்சிகளும் வரும் பாராளுமன்ற தேர்தலில் ஒன்றாக இணைய வேண்டும் என பாடம் புகட்டி உள்ளது.   கடந்த 2014 தேர்தலில் பாஜக 31% வாக்குகள் பெற்று ஆட்சியை அமைத்தது.    அதாவது பாஜகவுக்கு எதிராக 69% மக்கள் வாக்களித்துள்ளனர்.   ஆனால் அந்த வாக்குகள் பாஜகவுக்கு எதிரான பல கட்சிகளால் பிரிக்கப்பட்டுள்ளன.   அதனால் பாஜக வெற்றி வாய்ப்பை அடைந்தது.

தற்போது பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சி கூட்டணி இந்த நேரத்துக்கு தேவையான கூட்டணி.   அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்தால் பாஜக நிச்சயம் தோல்வி அடையும்.    மேலும் முன்பு போல பாஜக வாக்களிப்பு இயந்திர மோசடிகளில் தற்போது ஈடுபடவில்லை என தோன்றுகிறது.    ஏனென்றால்  பல தொகுதிகளில் முன்பு லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.   இது தவிர பல சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் பாஜக தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.    பாஜக ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.